மகளிர் உரிமைத் தொகைக்கான OTP யூடியூப் சேனலில் வருமா? அமைச்சரின் பேச்சால் குழம்பிய மக்கள்
பொங்கல் பரிசு தொகுப்பு தவிர மாதந்தோறும் மகளிர் உரிமை தொகையும் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Published : January 8, 2026 at 4:34 PM IST
மதுரை: விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவது குறித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, யூ டியூப் சேனலில் அதற்கான ஓடிபி வரும் என கூறியதால் கூடியிருந்த பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
இந்த ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி வாங்கும் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 3000 ரொக்கம் பரிசு தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று (ஜன 8) முதல் இத்திட்டமானது மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி, சேலை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொகுதிகளில் உள்ள எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இன்று காலை தொடங்கி வைத்தார்.
அப்போது மேடையில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்காக தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் ஒரு பகுதியாக இன்றிலிருந்து ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் விடுபட்டவர்களுக்கும் கூட தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி, “மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு யூடியூப் சேனலில் OTP வரும். அதை அவர்கள் கொடுத்தால், கண்டிப்பாக இந்த திட்டம் அனைவரையும் சென்றடைய முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என தெரிவித்தார்.
இதைக் கேட்ட பொதுமக்கள், “அமைச்சர் ஏதோ யூடியூப் சேனலில் OTP வரும் என்று சொல்லி விட்டு போகிறாரே... எந்த யூடியூப் சேனல்?” என்று குழப்பத்துடன் கேள்வி எழுப்பியவாறே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

