ETV Bharat / state

சின்னம்மை பாதித்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது - மா.சுப்பிரமணியன்

சின்னம்மை பாதிப்பு தொடர்பாக மாவட்ட அளவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 5:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: சின்னம்மை பாதிப்புள்ள குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், விளையாட்டு மருத்துவம் மற்றும் நுண் துளை மூட்டு அறுவை சிகிச்சை துறையில் ரூ.9 கோடி மதிப்பிலான சிறப்பு உயர்திறன் மையத்தை (Center of Excellence) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச் 3) திறந்து வைத்தார். அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், விளையாட்டு வீரர்களுக்கு விளையாடுவதற்கு முன்னும், பின்னுமான தகுதி பரிசோதனைகளை மேற்கொள்ள சர்வதேச தரத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள SDAT விளையாட்டு வீரர்கள், கிராமப்புற, நகர்ப்புற, மற்றும் தேசிய அளவிலான தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த மையம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், கலைஞரின் வருமுன் காப்போம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம், குழந்தைகளுக்கான தனி மருத்துவமனை என ஏற்கனவே சிறந்து விளங்குகின்றன.

இது மட்டுமின்றி, ஓமந்தூரார் மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இன்று ரூ.9 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுத் துறை வீரர்களுக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான மிகப் பெரிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுடன் பேசியது என்ன? - செல்வப்பெருந்தகை விளக்கம்

தமிழ்நாட்டில் எந்த பகுதிகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், மாவட்ட மருத்துவமனைகளிலும் இந்த மையம் செயல்படுத்தப்படும்” என்றார்.

தொடர்ந்து சின்னம்மை பாதிப்பு குறித்த கேள்வி, “வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது குறித்து மருத்துவ அலுவலர்கள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். அதன்படி, சின்னம்மை பாதிப்புள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது எனவும், வீட்டிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

முன்னதாக, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், 'சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களை அனைத்து கொப்பளங்களும் முழுமையாகக் காய்ந்து விழும் வரை, அதாவது சுமார் 7 - 10 நாட்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்தி வைப்பது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க உதவும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோய் முழுமையாக குணமாகும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.