ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமி ஒன்றும் பொருளாதார நிபுணர் கிடையாது - அமைச்சர் ஐ. பெரியசாமி விமர்சனம்

திமுகவிடம் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு வரும் கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சியாக செல்கின்றனர் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

அமைச்சர் ஐ. பெரியசாமி
அமைச்சர் ஐ. பெரியசாமி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 6:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திண்டுக்கல்: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வரிகளை உயர்த்தி மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவேன் என இபிஎஸ் கூறியதை அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துறை பகுதியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பல்வேறு முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், வேளாண் வங்கி துவங்குவதற்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, ''ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பேன் என்று 10 வருடத்திற்கு முன்பே மோடி சொன்னார். அதை கொடுத்து விட்டாரா? தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் மோடியை 15 லட்சத்தை முதலில் கொடுக்கச் சொல்லுங்கள். அதைக் கொடுத்தால் மக்கள் அனைவரும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள்'' என்றார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சில வரிகளை உயர்த்தி, உதவித்தொகை உள்ளிட்ட பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என இபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு, ''அது உண்மைக்கு மாறானது, அவர் ஒன்றும் பொருளாதார நிபுணர் கிடையாது. போகிற போக்கில் எதையாவது பேசிவிட்டு போகிறார்கள்.

மோடியும், அமித் ஷாவும் தானே நம்மிடம் வரியை வாங்கி மற்ற மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறார்கள். மத்திய அரசு துரோகம் செய்கிறது, அதற்கு எடப்பாடி பழனிசாமி துணை போகிறார். அதிமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை, எதிர்க்கட்சியாக கூட வராது என்று நான் நினைக்கிறேன். எதிர்க்கட்சி அந்தஸ்து வாங்குவது கூட சந்தேகம் தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "திண்டுக்கல் மாவட்டத்தில் 1989 இல் 850 ரேஷன் கடைகளே இருந்தன. இன்று 1,300 கடைகள் வந்ததற்கு காரணம் கலைஞர் தான். அதற்காக கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்தந்த கிராமங்களிலேயே பகுதி நேர ரேஷன் கடையை உருவாக்கினார். வீடு தேடி போய் வாங்குவது போல அவரவர்கள் வீட்டில் அருகாமலேயே ரேஷன் கடைகள் வந்து விட்டன. ஐந்தாண்டு காலங்களில் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்களை விரிவாக்கம் செய்து தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்'' என்றார்.

கூடுதல் இடங்கள் மற்றும் ராஜ்யசபா எம்பி கேட்பதால் காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் இழுபறி நீடிக்கப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, ''அப்படியெல்லாம் எதுவும் இல்லை. கூட்டணி சுமுகமாக உள்ளது. கூட்டணி பேச்சு வார்த்தைக்கு வரும் கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சியாக செல்கின்றனர்'' என்றார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை சீட்டுகள் கேட்டு வருகின்றனர் என்ற கேள்விக்கு, ''அதற்கு என்று தனி குழு அமைத்து உள்ளனர், அவர்களுக்குத்தான் அது தெரியும்'' என்றார்.

இரண்டு கட்சியும் மாறி மாறி இலவசங்களை அறிவித்துள்ள நிலையில் வீட்டு வரி, மின்சார வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகளை குறைப்பதற்காக அமைச்சரவையில் ஏதாவது முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, '' திண்டுக்கல்லில் மொத்தம் 306 ஊராட்சிகள் உள்ளன. எங்குமே வரிகள் உயர்த்தப்படவில்லை. குழாய் கேட்டால் அனுமதி கொடுத்துள்ளேன். எத்தனை பேர் குழாய்கள் கேட்டாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி உள்ளேன். அவர்களிடம் பணம் கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இப்போது மூன்றாவது தண்ணீர் திட்டம் வந்துள்ளது. எல்லா ஊர்களிலும் குழாய் போடப்பட்டுள்ளது. அதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க உள்ளோம், அதில் எந்த சந்தேகமும் இல்லை.'' என்றார்.

இதையும் படிங்க: “முதலில் கட்சிக்காரர்களை சந்தியுங்கள்” - விஜயை விமர்சித்த திமுக அமைச்சர்