'பறவை போலே..' குழந்தைகள் தினத்தன்று விமானப் பயணம்... மகிழ்ச்சியில் ஏழை மாணவர்கள்!
விமானத்தில் வரும்போது மேகக் கூட்டங்கள் அருகே இருந்ததை பார்த்ததும், தங்களுக்கு பறவை போல இறக்கை கட்டி பறப்பது போன்று பரவசம் ஏற்பட்டதாக மாணவ, மாணவிகள் நெகிழ்த்தியுடன் தெரிவித்தனர்.

Published : November 14, 2025 at 6:34 PM IST
தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகள் 30 பேர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்து மகிழ்ச்சியுற்றனர்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை சார்பில் வருடம்தோறும் “வானமே எல்லை” என்ற தலைப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஏழை குழந்தைகள் 30 பேர் முதன்முறையாக இன்று விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில், ஒரு திருநங்கை மாணவர் மற்றும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் உட்பட 30 குழந்தைகள் இருந்தனர்.
ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளையுடன் அனந்தம் நிறுவனம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், வேல்ஸ் வித்யாலயா கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் குழந்தைகளுடன் பயணித்து, அவர்களுடன் கலந்துரையாடி ஊக்கமும், மகிழ்ச்சியும் பகிர்ந்துகொண்டார்.
அவருடன் இசையமைப்பாளர் மற்றும் ரெயின்டிராப்ஸ் நல்லெண்ண தூதர் ஏ.ஆர். ரெஹானா, ரெயின்டிராப்ஸ் நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் அரவிந்த் ஜெயபால், விஜிபி குழுமத் தலைவர் டாக்டர் வி.ஜி.பி. சாந்தோசம், மாநில திட்ட ஆணைய உறுப்பினர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், அனந்தம் நிறுவனர் பகீரதி ராமமூர்த்தி, ஆர்கானிக் உணவு நிபுணர் மண் வாசனை மேனகா மற்றும் ரெயின்டிராப்ஸ் குழுவினரும் பங்கேற்று இருந்தனர்.
இதுகுறித்து அந்த குழந்தைகள் கூறும்போது, "இந்தப் பயணம் தங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. சென்னையில் இருக்கும் தாங்கள் விமானம் பறப்பதை தான் நொடிக்கு நொடி பார்த்துள்ளோம் ஆனால், விமானத்தில் சென்ற அனுபவம் கிடையாது. முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்தது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விமானத்தில் வரும்போது மேகக் கூட்டங்கள் அருகே இருந்ததை பார்த்ததும், தங்களுக்கு பறவை போல இறக்கை கட்டி பறப்பது போன்று பரவசம் ஏற்பட்டதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். குழந்தைகள் தினத்தன்று தாங்கள் விமானத்தில் பயணம் செய்தது தங்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்" என்று அவர்கள் தங்களது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.
இந்த குழந்தைகள் அனைவரும் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளிக்குச் சென்று அங்கு நடைபெற உள்ள சிறப்பு கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

