ETV Bharat / state

”வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோ” என்று பேசுவதா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி

தூத்துக்குடி மாவட்டத்தில் 5,41,000 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதா ஜீவன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 4:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: "வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோ" என்று எதிர்கட்சியினர் பேசுவதை யாரும் நம்ப மாட்டார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்புடன் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பணிகளைத் தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி டூவிபுரம் நியாய விலைக் கடையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். தொடர்ந்து, அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு காலமாக மழை, மும்மாரி பொழிந்து வருவதால் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. அனைத்து வகையிலும் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கின்றோம்” என்றார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கேட்ட போது, “தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 5,41,000 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நபருக்கும் பச்சரிசி, சீனி, பன்னீர் கரும்பு, ரூ.3,000, வேஷ்டி - சேலை ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 168 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக கூட்டுறவுத்துறை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நல்ல முறையில் பயனடைந்து வருகிறார்கள். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

பின்னர் சமூக நலத்துறை 4,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”எனக்கு என்ன கணக்கு என்று தெரியவில்லை. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் இலக்கு இது தான். தேர்தலுக்கு முன்பு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல வேண்டும். சட்டம் ஒழுங்கு, சீர்கேடு என்று சொல்ல வேண்டும் அதனை நோக்கி பயணிக்கின்றனர்.

இதையும் படிங்க: உலக மகா திருடர்கள் சேர்ந்து பெரிய திருடரிடம் மனு கொடுத்த கதை - ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

எந்த துறையிலும் ஊழல் நடைபெறவில்லை. வெளிப்படையான ஒர் நிர்வாகம் நடந்து கொண்டு இருக்கிறது. "வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோ" என்று பேசுகின்றனர். இவர்களை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். மக்கள் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்" என்று அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.