ETV Bharat / state

''தொட்டால் தீட்டு என சொல்லும் நிலையில் தொட்டால் தான் கபடி விளையாட முடியும்'' - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

தமிழ்நாடு அரசு விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. அதனால் தான் விளையாட்டு துறைக்கு மாநில அரசு நிறைய நிதியை ஒதுக்கீடு செய்கிறது. விளையாட்டுத் துறையில் இந்தியாவில் தமிழகம் தான் தலைநகராக உள்ளது.

வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்படுகிறது
வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்படுகிறது (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 11, 2026 at 6:58 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தொட்டால் தீட்டு என சொல்லும் நிலையில், தொட்டால் தான் கபடி விளையாட முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பொங்கல் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா, மூத்தப் பத்திரிகையாளர்கள் என்.ராம், நக்கீரன் கோபால், சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவர் சுரேஷ் வேதநாயகம், பொதுச்செயலாளர் மு. ஆசீப், சென்னை பத்திரிகையாளர் சங்க (எம்யூஜே) தலைவர் செல்வின் வினோத் மற்றும் பொதுச்செயலாளர் கோபி உள்பட பல்வேறு பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.

வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்படுகிறது
வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்படுகிறது (ETV Bharat Tamil Nadu)

இதன் பின்னர் நடைபெற்ற கபடி போட்டியில் 14 ஆண்கள் அணியும், 2 பெண்கள் அணியும் கலந்துகொண்டன. இறுதிப் போட்டியில் முதல் இடம் பிடித்த தினகரன் அணிக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த எம்யூஜே அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த சன் டிவி அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நடிகர் துருவ் விக்ரம் வழங்கி பாராட்டினர். அதேப்போல் கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய அனைத்து அணிகளுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது,''நாட்டிற்கு செய்தி சொல்லும் பத்திரிகையாளர் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. விளையாட்டு துறைக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் வழங்குகிறது. அதனால் தான் விளையாட்டு துறைக்கு மாநில அரசு நிறைய நிதியை ஒதுக்கீடு செய்கிறது. விளையாட்டுத் துறையில் இந்தியாவில் தமிழகம் தான் தலைநகராக உள்ளது. உலக அளவில் செஸ் போட்டியும் இங்கு நடத்தப்பட்டது.

கபடி போட்டியில் 14 ஆண்கள் குழு மற்றும் 2 பெண்கள் குழு கலந்து கொண்டுள்ள நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் கொண்டாடும் போதெல்லாம் ஆண்டுதோறும் கபடி போட்டி நடத்தப்படும் என்று பத்திரிகையாளர் மன்றம் அறிவித்தால் 16 குழு
50 குழுவாக மாறும்.

பொங்கல் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு, நடிகர் துருவ் விக்ரம்
பொங்கல் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு, நடிகர் துருவ் விக்ரம் (ETV Bharat Tamil Nadu)

கபடியை சடுகுடு என்று தான் அழைப்பார்கள். தற்போது கிரிக்கெட் மீது அதிகமாக ஈர்ப்பு இருக்கிறது. உயர்கல்வி படிக்கும் போது நான் கபடி விளையாடியுள்ளேன். பகுத்தறிவு விளையாட்டு என்றால் கபடி தான். தொட்டால் தீட்டு என, சொல்லும் நிலையில் இந்த விளையாட்டை தொட்டால் தான் விளையாட முடியும். தோல்வி அடைந்தவர்கள் இதை வெற்றியின் படிக்கட்டாக பார்க்க வேண்டும்'' என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

இதையும் படிங்க: காங்கிரஸின் கூட்டணி ஆட்சி பேச்சு: முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி

இதனைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் பேசும் போது, ''கபடி எனக்கு மிகவும் பிடிக்கும். கபடிக்குத் தான் தன்னம்பிக்கை, பலம் எல்லாம் தேவைப்படும். அதனால் தான் இங்கு வந்துள்ளேன்.'' என்றார்.