மடிக்கணினி இருந்தால் உலகத்தையே அறிந்து கொள்ளலாம் - அமைச்சர் துரைமுருகன்
மாணவர்கள் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ’உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என துரைமுருகன் கூறியுள்ளார்.

Published : January 11, 2026 at 11:40 AM IST
வேலூர்: இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி மிகவும் அவசியமானது என்றும், இது உலகத்தை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்தி நகரில், வேலூர் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சேர்க்காடு அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணை மேயர் எம்.சுனில்குமார் மற்றும் மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மேலும் கல்லூரிகளின் கல்வி இணை இயக்குனர் மலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு, வேலூர் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் 55 பேருக்கும், சேர்க்காடு அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 145 பேருக்கும் என மொத்தம் 200 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் மடிக்கணினி மாணவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. மடிக்கணினி மூலம் வெனிசுலா, அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. உலகத்தை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. மடிக்கணினி இல்லையெனில் நாம் பின்தங்கும் நிலை ஏற்படும். படிக்கும் காலத்திலேயே மடிக்கணினி வழங்கப்பட்டால், அது மாணவர்களின் கல்விக்கும், அறிவு வளர்ச்சிக்கும் பெரும் பயனளிக்கும் என்பதாலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ’உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்” என்றார். காட்பாடி தொகுதியில் துரைமுருகன் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து அவர் பேசுகையில், ”1971ஆம் ஆண்டு காட்பாடி தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்ட போது, கே.வி.குப்பம் முதல் பொன்னை வரை ஒரே ஒரு உயர்நிலைப்பள்ளி மட்டுமே இருந்தது. தற்போது அப்பகுதியில் 30 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
நான் சட்டத்துறை அமைச்சராக இருந்த போது, தமிழ்நாட்டில் 20 அரசு சட்டக்கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்களை கட்டி வழங்கினேன். காட்பாடியில் இரண்டு நீதிமன்றங்களை தொடங்கினேன். குடியாத்தத்தில் இருந்த தாலுகா அலுவலகத்தைப் பிரித்து, பொதுமக்களின் வசதிக்காக காட்பாடிக்கு கொண்டு வந்தேன். மேலும், தமிழ்நாட்டில் முதன்முறையாக குடிநீர் வடிகால் வாரியம் காட்பாடி காந்தி நகரில் தொடங்கப்பட்டது. அது இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவேரி நதியிலிருந்து காட்பாடிக்கு குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளேன்.
| இதையும் படிங்க: 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் |
அதேபோல் விருதம்பட்டு காவல் நிலையம், காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களை இப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளேன். எதிர்காலத்திலும் காட்பாடி தொகுதிக்காக இன்னும் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த உள்ளேன்” என்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

