ETV Bharat / state

''ரூ.3 ஆயிரம் கொடுக்கிறோம்.. ஓட்டு போடுங்க...'' - பகிரங்கமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்

பொங்கலுக்கு ரூ.3000, மகளிர் உரிமைத்தொகை ரூ.1000, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000 என்று ஆயிரம் ஆயிரமாக படி அளப்பவர் நம்ம முதல்வர் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன்
விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 6:38 PM IST

2 Min Read
Choose ETV Bharat

வேலூர்: பல்வேறு திட்டங்களை செய்த இந்த அரசு நீடிக்க வேண்டும். அதற்காக தான் மக்களின் ஆதரவை கேட்கிறோம். 3,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசை வலுப்படுத்த வேண்டும். எங்களது கோரிக்கை ஒன்றே. வருகின்ற தேர்தலில் ஓட்டுப் போடுங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த மேல்பாடியில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினர்.

இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, ''இந்த ஆண்டு எந்த ஆண்டையும் விட பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும். அரசுக்கு பெரும் செலவாக இருந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

பொங்கலுக்கு ரூ.3000, மகளிர் உரிமைத்தொகை ரூ.1000, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000 என்று ஆயிரம் ஆயிரமாக படி அளப்பவர் நம்ம முதல்வர். எதற்கெடுத்தாலும் மக்களுக்காக உதவித்தொகை வழங்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும், நான் அளித்த வாக்குறுதியின்படி அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கொண்டு வந்துள்ளேன். அந்த மருத்துவமனையை 100 படுக்கை வசதியுடன் மேம்படுத்தி கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

இத்தனை திட்டங்களை செய்த இந்த அரசு நீடிக்க வேண்டும். அதற்காக தான் மக்களின் ஆதரவை கேட்கிறோம். 3,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசை வலுப்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கை ஒன்றே. வரும் தேர்தலில் ஓட்டுப் போடுங்கள்'' என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, ''பொங்கல் தொகுப்புக்கு ரூ.3,000 வழங்கும் அரசின் ‘பாட்ஷா’ பலிக்காது என எதிர்க்கட்சிகள் கூறுவதாக சொல்கின்றீர்கள். எங்கள் பாட்ஷா பலிக்காவிட்டாலும் பரவாயில்லை. எடப்பாடி நடத்தும் அரசியல் நாடக பாட்ஷா பலித்தால் போதும்'' என்று கூறினார்.

முன்னதாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசுகையில், ''பொங்கல் பரிசு தொகுப்பு வேலூர் மாவட்டத்தில் எங்கு கொடுப்பது என அமைச்சரிடம் ஆலோசித்த போது அவர் மேல்பாடியில் தான் கொடுக்க வேண்டும். எனக்கு மனசுக்கு நிறைந்த பகுதி அது. அங்கு தான் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க: 'தனித்தன்மையை இழந்து பாஜகவிற்கு அடிமையாகிவிட்டது அதிமுக' - முன்னாள் எம்எல்ஏக்கள் சாடல்

எவ்வளவு மக்களுக்கான திட்டங்களை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் முதலமைச்சரை கொண்டாடி வருகின்றனர். உங்களை கொண்டாட கூடியது தமிழ்நாடு தான். உங்களுக்கு சொந்தக்காரர்களும் நமது தமிழர்கள் தான். இது தமிழர்களின் பண்பாடு.'' என்று பேசினார்.