பரந்தூர் விமான நிலையத்திற்கு தவெக அரசு அனுமதி அளிக்காது - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் உறுதி
எடப்பாடி பழனிசாமி தனது உட்கட்சி பிரச்சினைகளை திசை திருப்பவே மின்தடை குறித்து பொதுப்படையாகக் குற்றஞ்சாட்டுகிறார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Published : June 18, 2026 at 5:16 PM IST
சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்காது என அமைச்சர் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத் தொடரில், தவெக அரசின் நிலைப்பாடு குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து, மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலாவது கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில், எந்த பிரச்சனையும் இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அடுத்த 5 ஆண்டுகளில் அரசு எவ்வாறு செயல்படப் போகிறது என்பது குறித்த தொலைநோக்கு பார்வை தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எதை நோக்கி பயணிக்கிறது? அதன் வளர்ச்சிப்பாதை எத்தகையது? என்பது தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் நெருக்கமான உறவு இருக்கிறது. தேசிய கீதம் இரு முறை பாடியதில் தவறு ஒன்றுமில்லை. நாங்கள் எந்த திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. சிங்கப்பெண் திட்டம் எங்களுடைய திட்டம். தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் எங்களுடையது. திமுக திட்டங்கள் கிடையாது.
மேலும், உதயநிதி 5 ஆண்டுகள் சட்டப் பேரவைக்கு வந்திருக்கிறார். ஆனால், அவருக்கு நடைமுறை என்னவென்று கூட தெரியவில்லை. முதல் நாளில் ஆளுநர் மட்டுமே உரையாற்றுவார்.
தொடர் மின்வெட்டு
மின் புகார்களை சரி செய்யும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 52 இடங்களில் மின் பாதிப்பு ஏற்பட்டது. அதில், 37 இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவும், பெரும்பாலான இடங்களில் 15 நிமிடங்களுக்குள்ளாகவும் மின் விநியோகம் சரிசெய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் மின்மாற்றிகள் (Transformers) கொண்ட பெரிய உள்கட்டமைப்பு உள்ள நிலையில், தினசரி மின்பாதிப்புகள் மற்றும் அவை சரி செய்யப்படும் விவரங்கள் இணையதளத்தில் வெளிப்படையாக பதிவேற்றப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் உண்மையான நிதி நிலைமையை மக்கள் அறிந்து கொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளில் நலிவடைந்துள்ளன. முந்தைய ஆட்சியில் கூடுதல் வருவாயைப் பெருக்க எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. அடுத்த வாரம் மின்சார வாரியம் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
உடனடி நடவடிக்கை
எடப்பாடி பழனிசாமி உட்கட்சி பிரச்சனையை திசை திருப்பவே மின்வெட்டு குறித்து குற்றம் சாட்டுகிறார். குற்றச் சம்பவங்களை மறைக்கும் வேலை கடந்த ஆட்சியில் நடந்தது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் மற்றும் முகப்பேர் சிறுமி வழக்குகளில் உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் எந்த குற்றச் சம்பவமாக இருந்தாலும், உடனடியாக பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். எதையும் மூடி மறைக்கவில்லை.
பெண்களின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' திட்டம் தொழில்நுட்பரீதியாகவும், நவீன கருவிகளுடனும் மேலும் வலுப்படுத்தப்படும்.
பரந்தூர் விமான நிலைய பிரச்சனை
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான நிலைபாட்டில் தான் முதலமைச்சர் உள்ளார். நீர்நிலைகளை அழித்து விட்டு விமான நிலையம் அமைக்கமாட்டோம். ஏனென்றால், நமது முதலமைச்சர் பரந்தூரில் இருந்து தான் அவரது பயணத்தை தொடங்கினார். எனவே, பரந்தூர் விமான நிலையத்திற்கு தவெக அரசு அனுமதி அளிக்காது. நீர்நிலைகளைப் பாதிக்காத வகையிலும், விளைநிலங்களை அழிக்காத வகையிலும் மாற்று இடங்கள் குறித்து வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது” என்றார்.
”விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரூ.6,000 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

