தமிழ்நாட்டில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் - அமைச்சர் அருண் ராஜ் கொடுத்த 'அப்டேட்'
நெல்லை, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா 100 இடங்கள் விதம், ஆண்டுக்கு மொத்தம் 600 பிஎஸ்சி நர்சிங் பட்டயப்படிப்பு இடங்களில் உருவாக்கப்படுகின்றன என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

Published : September 2, 2026 at 12:15 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் புதியதாக 7 நர்சிங் கல்லூரிகள் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண் ராஜ் பேரவையில் தெரிவித்துள்ளார்.
செவிலியர் கல்லூரிகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சட்டமன்றத்தில் அவர் பேசியதாவது, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சேலம், மதுரை மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் மட்டுமே அரசு செவிலியர் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
2014ம் ஆண்டுக்குப் பிறகு புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படவில்லை. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி அன்று, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110 கீழ் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்திய செவிலியர் கவுன்சில் விதிமுறைகளின் படி, ஒரு புதிய செவிலியர் கல்லூரி துவங்க போதிய படுக்கை வசதிகள் கொண்ட தேவையான மருத்துவப் பிரிவுகள் கொண்ட போதிய புறநோயாளிகள் எண்ணிக்கை, வெளி நோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சேவை மற்றும் அதற்கு தேவையான கட்டுமானங்கள் அவசியம்.
| இதையும் படிங்க: ‘விஜய் அண்ணா வராதீங்க’ - நீட் போராட்டத்தில் முதலமைச்சர் அனிதா சகோதரர் வைத்த கோரிக்கை என்ன? |
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை இணைப்பு மருத்துவமனையாக கொண்டு புதிய செவிலியர் கல்லூரியில் துவங்கப்பட உள்ளன. திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா 100 இடங்கள் விதம், ஆண்டுக்கு மொத்தம் 600 பிஎஸ்சி நர்சிங் பட்டயப்படிப்பு இடங்களில் உருவாக்கப்படுகின்றன.
மேலும் கூறிய அமைச்சர் அருண் ராஜ், இந்த ஆறு செவிலியர் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து நடத்திட தொடர் மற்றும் தொடரா செலவினமாக ரூபாய் 270 கோடி முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில அரசு நிதியில் இருந்து, 60 பிஎஸ்சி நர்சிங் இடங்களுடன் புதிய செவிலியர் கல்லூரி ஒன்றும் தொடங்க முன்மொழியப்பட்டது.
இதைத்தவிர ஏற்கனவே உள்ள ஆறு பிஎஸ்சி நர்சிங் பணியிடங்கள் கொண்ட மருத்துவ செவிலியர் மருத்துவ கல்லூரியில் கூடுதல் இடங்கள், 440 கூடுதல் இடங்கள் உருவாக்கி இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் அருண் ராஜ் கூறினார்.

