பிளஸ் டூ பொதுத் தேர்வு - மொழிப்பாட தேர்வை 9,919 பேர் எழுதவில்லை
முதல்நாள் நடைபெற்ற தமிழ் மொழிப்பாட தேர்வு எளிமையாக இருந்ததாகவும், ஒரு மதிப்பெண் கேள்வி மட்டும் சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வெழுதிய 12ம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Published : March 2, 2026 at 3:23 PM IST
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கிய நிலையில், முதல் நாள் தேர்வை 9,919 மாணவ, மாணவிகள் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (மார்ச் 2) முதல் மார்ச் 26ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 3,412 தேர்வு மையங்களில், பள்ளி மாணவர்கள் 7,99,692 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் 27,783 பேர் என மொத்தம் 8,27,475 தேர்வர்கள் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெற்றது. அதன்படி, காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது.
அதே போல, கடந்த ஆண்டுகளில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் இருந்த மாணவர்களுக்கு (Arrear) மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை 2,615 தேர்வு மையங்களில் 19,107 மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என மொத்தம் 25,051 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். மேல்நிலைப் பொதுத்தேர்வினை 281 சிறைவாசிகளும் எழுதவுள்ளனர்.
தேர்வுக்காக ஒவ்வொரு நாளும் சுமார் 49 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களும், தேர்வு முறைக்கேடுகளை தடுக்க சுமார் 4,900-க்கு மேற்பட்ட பறக்கும் படையினரும் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு காலை 8 மணி - இரவு 8 மணி வரையில் அனைத்து தேர்வு நாட்களிலும் 94983-83075, 94983-83076 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னையில் 578 அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 64,359 மாணவர்கள், 3,157 தனித் தேர்வர்களும், சிறையில் உள்ள 250 தேர்வர்களும் தேர்வெழுதவுள்ளனர். வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் சேகரிக்க 5 மையங்களும், வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 65 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 250 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 250 துறை அலுவலர்கள், 550 பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்கள், 4,100 அறை கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 1,000 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 6150 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா ஆகியோரும் அப்போது உடன் இருந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “இன்று பொதுத்தேர்வு எழுதக்கூடிய 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பள்ளிகளில் படித்த 7,99,692 பேரும், தனித்தேர்வர்கள் 27,501 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் இரவு முழுவதும் கண் விழித்து படித்து விட்டு, தேர்வு அறையில் தூங்க வேண்டாம். தூங்காமல், சாப்பிடாமல் உடல் நலனை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
நன்கு படித்து விட்டு, சரியாக உறங்கி விட்டு பின்னர் தேர்வு எழுத வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். மாணவர்கள் வகுப்பறையில் டெஸ்ட் தேர்வு எழுதியது போல, இதுவும் ஒரு சாதாரண தேர்வு தான். ஏற்கனவே இவர்களுக்கு 3 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், “விருதுநகர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு சென்ற மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. இது ஈடு செய்ய முடியாத இழப்பு. முடிந்த வரை, அருகே உள்ள தேர்வு மையம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத சமயத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதால், இது நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வழக்கம்போல் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வு முடிந்த பின்னர் வினாத்தாள் பாதுகாப்பான முறையில் எடுத்து செல்லப்படும்” என தெரிவித்தார்.
முதல் தேர்வில் 9,919 பேர் ஆப்சென்ட்
இதனிடையே முதல் நாள் மொழிப் பாடத் தேர்வை 9,919 மாணவ மாணவிகள் எழுதவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இன்றைய தேர்வை 8,16,289 (பள்ளி மாணவர்கள்-7,99,692; தனியார் -16,597) பேரில் மொத்தம் 9,919 (பள்ளி மாணவர்கள் - 8,319; தனியார்-1,600) பேர் எழுதவில்லை என்று தெரிவித்துள்ளது.

