ETV Bharat / state

நல்லகண்ணு ஐயா அமைத்த பாதையில் மக்களுக்காக உழைக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு மூத்த பத்தரிகையாளர் என்.ராம், தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

நல்லகண்ணுவிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அஞ்சலி
நல்லகண்ணுவிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அஞ்சலி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 12:44 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: நல்லகண்ணு ஐயா அமைத்து தந்த பாதையில் நாம் தொடர்ந்து பயணித்து, தமிழ்நாட்டு மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் உழைக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ”பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர், ஐயா நல்லகண்ணு மறைவு அனைவருக்கும் வருத்தம். யாரும் வெறுக்க முடியாத மனிதன், எளிமையின் மறு பெயர். தமிழ்நாட்டுக்காக எவ்வளவு உழைத்துள்ளார் என்று எல்லோருக்கும் தெரியும். தூத்துக்குடியில் பிறந்த முத்து, இன்று சென்னையில் தன் இறுதி நாட்களை கழித்திருக்கிறார்.

ஐயா நமக்கு அமைத்து தந்த பாதையில் தொடர்ந்து பயணித்து, தமிழ்நாட்டு மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் உழைப்பதை நம் குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்பதை உறுதி ஏற்கும் நாளாக கொள்ள வேண்டும். அவரை மறைந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நல்லகண்ணுவிற்கு அஞ்சலி செலுத்திய பின் மூத்த பத்தரிகையாளர் என். ராம் பேசுகையில், ”தோழர் நல்லகண்ணு வாழ்க்கை மிகப்பெரிய எடுத்துக்காட்டு. பள்ளி காலத்தில் அர்ப்பணிப்புடன் இருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பணியாற்றி இருக்கிறார். சுதந்திர போராட்டத்தில் பங்காற்றியுள்ளார். அவருடன் பழகியது மிகப்பெரிய அனுபவம். சங்கரய்யா அவர்களும், நல்லகண்ணு ஐயா அவர்களும் சிறப்பான நண்பர்கள். அவர்கள் இருவரும் கைப்பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் மறக்க முடியாதது” என்றார்.

நல்லக்கண்ணுவிற்கு அஞ்சலி செலுத்திய பின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அஞ்சலி பேசுகையில், ”நூறாண்டு கண்ட தோழர் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இருப்பை உறுதி செய்தவர். ஆசா பாசங்கள் இல்லாத அரசியலை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்ததில் பெருமை கொள்கிறோம். ஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்றவர்.

இதையும் படிங்க: அண்ணா, காமராஜராக நல்லகண்ணுவை பார்க்கிறேன் - ரஜினிகாந்த் புகழஞ்சலி

எந்தவிதமான கண்ணியக் குறைவான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வந்ததில்லை. வாசிப்பவர்களுக்கு அவரே வழிகாட்டியாக இருந்தவர். என்னை போன்றவர்களுக்கு வேடந்தாங்கல் சரணாலயமாக இருந்தவர் மரணத்தின் அடியில் விழுந்துவிட்டார். நல்லகண்ணு மறைந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பாகிவிட்டது. அவருடைய வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.