தஞ்சை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்; அமைச்சர் ஷாஜஹான் உறுதி
விவசாயிகள் ஒருவர் கூட காப்பீட்டுத் திட்டத்தைப் பெறவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்று அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் கூறியுள்ளார்.

Published : June 2, 2026 at 8:38 PM IST
தஞ்சாவூர்: பாபநாசம் பகுதியில் சூறைக்காற்றால் நிலைகுலைந்த வாழை மரங்களை பார்வையிட்ட அமைச்சர் ஷாஜஹான், விவசாயிகளுடைய துயரைத் துடைக்கும் விதமாக விரைவில் நிவாரணம் பெற்று தரப்படும் என்று உறுதி அளித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (மே 31) பலத்த சூறைக் காற்று வீசியது. இதில், அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் இன்று (ஜூன் 2) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பாபநாசம் தொகுதியில் வீசிய சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக மிகப் பெரிய பாதிப்பை வாழை விவசாயிகள் சந்தித்து உள்ளனர். 432 ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான வாழை மரங்கள் சூறைக்காற்றால் சேதமாகி உள்ளன. இதனை நேற்று முன்தினம் முதல் தோட்டக்கலைத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இன்றுவரை கணக்கெடுக்கப்பட்டதில் சுமார் 66 ஹெக்டேர், அதாவது 33 சதவீதத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் பாதிப்படைந்து இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு இன்னும் நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பிறகு உரிய முறையில் தமிழக முதலமைச்சரிடம் இந்த துயரத்தை எடுத்துக் கூறி, அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கக் கூடிய வகையில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.
| இதையும் படிங்க: டெல்லி புறப்பட்ட நயினார் நாகேந்திரன்; அண்ணாமலைக்காக பாஜக மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்படுகிறதா? |
பயிர் பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் காப்பீட்டுத் திட்டம் உள்ளது. ஆனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒருவர் கூட காப்பீட்டுத் திட்டத்தைப் பெறவில்லை. இது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இதற்கான காரணங்களை விவசாயிகளிடம் கேட்டபோது, அதில் இருக்கக்கூடிய விதிமுறைகள் அவர்களுக்கு சவாலாக இருப்பதாகவும், அதனால் அவர்கள் யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆகையால், காப்பீடு திட்டத்தைப் பெறும் நடைமுறையை விரைவில் எளிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், விவசாயிகளுடைய துயரைத் துடைக்கும் விதமாக விரைவில் நிவாரணங்கள் பெற்று தரப்படும்" என்று அமைச்சர் ஷாஜகான் கூறினார்.

