ETV Bharat / state

சென்னை மேயர் பிரியா தவெக அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை: பேரவையில் கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா

ஆட்சி அதிகாரம் மாறிவிட்டது. ஆனால், உள்ளாட்சித் துறையில் அதிகாரம் மாறவில்லை. அடுத்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் தான் 100 சதவீதம் வெற்றி பெறும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை
பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 4:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: சென்னை மேயர் உட்பட பல மாநகராட்சி மேயர்கள் தவெக அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட 4 துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது மதுரை மேற்கு தொகுதி தவெக எம்எல்ஏ தங்கபாண்டி பேசுகையில், "மதுரை மாநகராட்சியில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.அந்தத் தொகையை மீட்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?" என அவர் கேள்வியெழுப்பினார்.

'தவறு செய்தால் நடவடிக்கை எடுங்கள்'

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, "முந்தைய ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட தலைவர்கள், மேயர் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் மீது கைது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. தற்போது அதிகாரமும், காவல்துறையும் உங்களிடம்தான் இருக்கிறது. எந்த மாநகராட்சியில் தவறு நடந்திருந்தாலும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுங்கள்" எனக் கூறினார்.

'எல்லா மாநகராட்சிகளிலும் ஊழல்'

அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுந்து, "கடந்த ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் எவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்றது என மக்கள் அனைவருக்கும் தெரியும்.

மதுரை மாநகராட்சியே ஊழலில் ஊறிப் போயுள்ளது. ரூ.200 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அதனை மீட்க முந்தைய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இதைத்தான் மக்கள் கேட்கிறார்கள்.

மதுரை மட்டுமல்லாது, அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. கூடிய விரைவில் எந்தெந்த மாநகராட்சியில் எவ்வளவு ஊழல் நடைபெற்றது என்பதை நாங்கள் வெளிப்படுத்துவோம்" என்றார்.

அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், "மதுரை மாநகராட்சியில் 60,000-க்கும் மேற்பட்ட வர்த்தகக் கட்டடங்களில் முறையாக வரி வசூல் செய்யப்படாமல் முறைகேடு நடந்துள்ளது.

ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவில் வர வேண்டிய வரி வராமல் போய் உள்ளது. இந்த 200 கோடி ரூபாயை ஒரு சில மண்டல தலைவர்கள், மேயர் அளவில் பிரித்துக் கொண்டு போய்விடுகிறார்கள்.

சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. சொத்து வரி மறுபரிசீலனைதான் நடைபெற்று வருகிறது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, "நாங்கள எதை சொன்னாலும் சட்டத்துறை அமைச்சர் ஊழல் என்று சொல்லி அதை புறந்தள்ள பார்க்கிறார். தவறு செய்தால் நடவடிக்கை எடுங்கள்" என்றார்.

'மேயர் பிரியா இணைந்து செயல்படுவதில்லை'

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நகராட்சியில் ஒவ்வொரு ஊரிலும் தாய்மார்கள் குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீருக்காக ரோட்டில் நிற்கிறார்கள்" எனக் கூறியபோது, திமுக எம்எல்ஏ ராஜா, 'பனையூர்' என கூச்சலிட, "நீங்கள் பனையூர் என்று சொன்னால், நாங்கள் கோபாலபுரம் என்று சொல்லுவோம்" என ஆதவ் ஆவேசமாக பேசினார்.

தொடரந்து பேசிய ஆதவ், "உள்ளாட்சித் துறை இன்னமும் திமுகவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 25 மாநகராட்சிகள் திமுகவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. துறை சார்பில் எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் அதற்கான நிதிகளை ஒதுக்கினாலும், மேயர்கள், மிகப்பெரிய நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து தலைவர்கள் அதை செயல்படுத்துவது இல்லை.

அரசு அதிகாரம் மாறிவிட்டது. ஆனால், உள்ளாட்சித் துறையில் அதிகாரம் மாறாததால், மேயர்கள், மண்டல பொறுப்பாளர்கள், நகராட்சி - பேரூராட்சி தலைவர்கள், அரசுடன் சேர்ந்து செயல்படுவது இல்லை.

குறிப்பாக, சென்னை மேயர் (பிரியா) அரசுடன் சேர்ந்து செயல்படுவதில்லை. வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தான் 100 சதவீதம் வெற்றி பெறும். அப்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும்" என்றார்.