கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை: கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்த உயர்நீதிமன்றம்
இந்த வழக்கில் காவல்துறை தகுந்த ஆதாரங்களை சமர்பிக்கவில்லை என்று கூறி கீழமை நீதிமன்றம் 9 பேரையும் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி விடுதலை செய்தது.

Published : February 25, 2026 at 11:59 AM IST
சென்னை: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேரை விடுதலை செய்த கோபிசெட்டிப்பாளையம் அமர்வு நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கடத்திச் சென்றனர்.
கடத்தி செல்லப்பட்ட ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி, தமிழக - கர்நாடக அரசுகள் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்த இரண்டு குழுக்களை காட்டுக்குள் அனுப்பின. பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 108 நாள்கள், பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்தக் கடத்தல் வழக்கில் வீரப்பன் உட்பட அவருடைய கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, மல்லு, ரமேஷ், கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுசாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வன், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகியோர் மீது ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோபிச்செட்டிபாளையம் 3வது அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே 2004ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன் மற்றும் சந்திரகவுடா ஆகிய மூவரும் சிறப்பு காவல்படையால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையின்போது வழக்கில் தொடர்புடைய மல்லு இறந்துவிட, ரமேஷ் தலைமறைவானார். மீதமுள்ள 9 பேர் 18 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை எதிர்கொண்டு வந்தனர்.
| இதையும் படிங்க: சிறையில் இருந்து வந்த பிறகும் எனக்கு பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன: உணர்ச்சி பொங்க பேசிய சசிகலா |
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய வீரப்பன் கூட்டாளிகளான கோவிந்தராஜ் , அன்றில், பசுவண்ணா, புட்டுசாமி, கல்மண்டிராமன், மாறன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், வீரப்பனுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பு இருந்தது என்பதை நிரூபிக்க காவல்துறை போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை. கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவருடைய மனைவி பர்வதம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தவில்லை. தூதுவர்களாகக் காட்டுக்குள் சென்றவர்களிடம் காவல்துறை விசாரிக்கவில்லை. எனவே தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 9 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்” என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பி. வேல்முருகன், எம். ஜோதிராமன் அமர்வு முன்பு நடைபெற்றது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், குற்றச்சாட்டை நிரூபிக்க காவல்துறை போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்து, அனைவரையும் விடுதலை செய்த கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

