தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி
"மேற்கு வங்கத்தில் இதுபோல பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த போது, ஒரு குழுவை அமைத்து துணைவேந்தர்களை உச்ச நீதிமன்றமே நியமித்தது"

Published : July 8, 2026 at 3:18 PM IST
சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 20 அரசு பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி செங்கல்பட்டை சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் பாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "ஏற்கனவே பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் இந்த ஆண்டின் இறுதியுடன் காலியாக இருக்கின்றன.
கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் சாசன அதிகார அமைப்பிற்கும், அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு காரணமாக துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளதால், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
| இதையும் படிங்க: கட்டண விவரங்களை அறிவிப்பு பலகைகளில் வெளியிடுக: தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு |
மேற்கு வங்கத்திலும் இதே போன்ற ஒரு நிலை நிலவிய போது, ஓய்வு பெற்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து, துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பியது.
அதேபோல, தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவதற்கு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில், பல்கலைகழக மானிய குழு பிரதிநிதியை சேர்த்து ஒரு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் பாஸ்கர் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

