கருணை அடிப்படையில் வேலை என்பது அரசியல் சாசன நியமன திட்டம் அல்ல - நீதிமன்றம் அதிரடி
அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு, சமூகநீதி ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும். சலுகை நியமனங்கள் பின்தங்கிய பிரிவினர் வேலைவாய்ப்பு பெறும் சந்தர்ப்பத்தை பாதிக்கிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published : August 31, 2026 at 7:15 PM IST
சென்னை: கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது சலுகை தானே தவிர, அரசியல் சாசன நியமனத் திட்டம் அல்ல. அதை உரிமையாக கோரவும் முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுப்பணித்துறையில் பணியாற்றிய அரசு ஊழியர் மரணமடைந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது சலுகை தானே தவிர, அரசியல் சாசன நியமன திட்டம் அல்ல. அதை உரிமையாக கோரவும் முடியாது" என சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், "அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும், அரசியல் சாசன விதிகளின் படி மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த தகுதியும் பார்க்காமல், இட ஒதுக்கீட்டையும் பின்பற்றாமல் கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் வழங்கப்படுவது அரசியல் சாசன பிரிவுகளுக்கு விரோதமானவை.
| இதையும் படிங்க: அரசு பெண் ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்'... மூன்று குழந்தைக்கு மேல் பெற்றுகொள்வோருக்கு 12 வாரம் மகப்பேறு விடுப்பு |
கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதன் மூலம் திறமையற்ற அரசு நிர்வாகத்துக்கு வழிவகுக்கும் என்றால், இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் மறு ஆய்வு செய்து தகுதியான குடும்பங்களுக்கு மட்டும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல, "அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும். சலுகை நியமனங்கள் பின்தங்கிய பிரிவினர் வேலைவாய்ப்பு பெறும் சந்தர்ப்பத்தை பாதிக்கிறது" எனக் கூறிய நீதிபதிகள், அரசு ஊழியர் மரணமடைந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

