அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கு: மாநில மகளிர் ஆணைய உத்தரவு ரத்து
அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் சில மாதங்களுக்கு முன் விழுப்புரத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Published : February 25, 2026 at 5:24 PM IST
சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் சில மாதங்களுக்கு முன் விழுப்புரத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, சென்னையைச் சேர்ந்த பிரமிளா, ராதிகா ஆகிய இருவர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரை விசாரித்த ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி.க்கு 2025 நவம்பர் 11ஆம் தேதி பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில், "விசாரணைக்கு ஆஜராகக் கூறி மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை.
ஆணையத்தின் பிற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்காமல், குற்ற நடவடிக்கை எடுக்கக் கூறி, ஆணைய தலைவர் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதனால் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல் துறை தரப்பு "மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் விவரங்களை தெரிவிக்க அவசியமில்லை. ஆணையம் தற்போது பரிந்துரை மட்டுமே அனுப்பியுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா? என இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என தெரிவித்தது.
மகளிர் ஆணையம் தரப்பில், "ஆணைய தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் அமர்வு தான், குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது. கையெழுத்திடும் அதிகாரி என்ற முறையில் ஆணையத் தலைவர், டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை" என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சி.வி.சண்முகத்துக்கு எதிராக மகளிர் ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் நடைமுறை தவறுகள் உள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கும்படி ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

