ETV Bharat / state

என்.ஆர்.ஐ நிதியுதவி ஒதுக்கீட்டு கலந்தாய்வில் மாணவருக்கு அனுமதி - உயர் நீதிமன்றம் உத்தரவு

மாணவருக்கு நிதியுதவி அளிக்கும் உறவினர் அமெரிக்காவில் இருப்பதால், என்.ஆர்.ஐ நிதியுதவி ஒதுக்கீட்டின் கலந்தாய்வில் பங்கு பெற அனுமதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 11:27 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர் நிதியுதவி ஒதுக்கீட்டில் மாணவரை மருத்துவ கலாந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையை சேர்ந்த முகமது அமர் எனும் மாணவர், தன்னை என்.ஆர்.ஐ நிதியுதவி பெறும் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கு பெற அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாணவர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மாணவரின் தந்தை உயிரிழந்த நிலையில், அவரது மருத்துவ படிப்பு செலவை ஏற்க மாணவரின் சித்தப்பா முன்வந்துள்ளதாக கூறினார். அவர் அமெரிக்காவில் வசிப்பதால், என்.ஆர்.ஐ நிதியுதவி ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க மாணவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவரை கலந்தாய்வில் பங்கேற்க மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு மறுத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மாணவரின் விண்ணப்பத்தை பரிசீலித்த மருத்துவ கலந்தாய்வு குழு, என்.ஆர்.ஐ நிதியுதவி ஒதுக்கீடு கீழ் பங்குபெற நீதிமன்ற உத்தரவு பெற்று அதை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் இந்த விதி செல்லும் என அதனை மாணவர் ஏற்க மறுத்ததாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மருத்துவ கலந்தாய்வு குழுவுக்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞர், இந்திய நாட்டை சேர்ந்தவரின் மகனுக்கு, வெளிநாட்டில் இருப்பவர் நிதி உதவி செய்கிறார் என்பதற்காக என்.ஆர்.ஐ நிதி உதவி திட்டத்தின் கீழ் மாணவரின் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ. 35-க்கு விற்பனை; கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு நடவடிக்கை

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விசாரணைக்கு பின்னர், என்.ஆர்.ஐ நிதியுதவி பெறும் ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்க மாணவருக்கு அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் அதிக இந்திய ஒதுக்கீடு இடங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு குழு மூலம் நடத்தப்படும் கலந்தாய்வின் முதல் சுற்று ஆகஸ்ட் 4 முதல் தொடங்கி 21 வரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் செப்டம்பர் 3 முதல் 11 வரை நடைபெறவுள்ளது.