'ஜனநாயகன்' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Published : January 9, 2026 at 10:46 AM IST
சென்னை: 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்குமாறு மத்திய தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று (ஜன.9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த டிசம்பர் மூன்றாவது வாரத்தில், 'ஜனநாயகன்' படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது, படத்தில் உள்ள 14 சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறும், நீக்கினால் மட்டுமே படத்திற்கு UA சான்றிதழ் வழங்கப்படும் என தணிக்கை குழு வாய் மொழியாக தெரிவித்ததாக தகவல் வெளியானது. பின்னர், தணிக்கை குழு கூறியவாறு குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டு, தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அப்போதும் சென்சார் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்த தணிக்கை குழு, படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என தெரிவித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த படக் குழு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் (ஜன.7) விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தை டிச 22 ஆம் தேதி பார்த்து ஆய்வு செய்த 4 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்ற ஒருவர் டிச 29 ஆம் தேதி அளித்த புகார் ஏற்கத்தக்கதுதானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு U/A சான்று வழங்க முடிவு செய்த பின்பு அதனை மறுஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறுஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு உடனே தகவல் தெரிவிக்காமல் ஜனவரி 5-ம் தேதி தெரிவித்தது ஏன்? என சென்சார் குழுவிற்கு நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சென்சார் போர்டு தரப்பு, ஆய்வுக் குழுவின் பரிந்துரையில் திருப்தியில்லை என்றால், திரைப்படத்தை மறுபரிசீலனை செய்ய 9 பேர் கொண்ட மறு ஆய்வு குழு பார்வையிட படத்தை அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இந்த படத்தில் இந்திய பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால், பாதுகாப்புப் படை நிபுணர்களிடம் ஆலோசனை பெற முடிவெடுக்கப்பட்டது.
பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், படத்தை முதலில் பார்த்த ஆய்வு குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்தனர். 4 உறுப்பினர்களில் பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என கூற முடியும் ? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: 'ஜனநாயகன்' திரைப்பட பிரச்சினை - பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய் உடைத்த புஸ்ஸி ஆனந்த்
இதையடுத்து, இன்று (ஜன.9) வெளியாக இருந்த 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கே.வி.என்.புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கை சான்று வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா இன்று தீர்ப்பை வாசித்தார். அப்போது, 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு உடனடியாக U/A தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டார். மேலும் ஏற்கெனவே படத்தை பார்த்த குழு உடனே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மறு தணிக்கை குழுவின் ஆய்வுக்கு படத்தை அனுப்ப, தணிக்கை வாரிய தலைவருக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.
மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால், பிற்பகலில் வழக்கை விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இதனையடுத்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

