"நேபாளம் சென்ற தமிழர்கள் என்ன ஆனார்கள்?" - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை, அரசு விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

Published : September 2, 2026 at 3:58 PM IST
சென்னை: நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த ’சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு சென்றனர். அப்போது கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், நேபாளம் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும். மேலும் மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், காணாமல் போன தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை பத்திரமாக மீட்கவும், ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டவர்களை கண்டுபிடித்து மீட்கவும், பாதுகாப்பாக அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தர்.
இந்த இரு வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழ்நாட்டில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில், 220 பேர் மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
| இதையும் படிங்க: கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் மீதான வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு |
மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். இதனையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

