'ஜனநாயகன்' திரைப்பட விவகாரம்: தணிக்கை வாரியத்திற்கு பறந்த உத்தரவு
வினோத் இயக்கத்தில் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published : January 6, 2026 at 5:15 PM IST
சென்னை: நடிகர் விஜய்யின் ’ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது குறித்து மத்திய தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் ’ஜனநாயகன்’ திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. திரைப்படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து, கடந்த 2025 டிசம்பர் மாதம் தணிக்கைக்காக படக்குழு படத்தை அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19 ஆம் தேதி படத்தை பார்வையிட்ட தணிக்கைக் குழு, ஆட்சேபகரமான சில காட்சிகளை படத்தில் இருந்து நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனையடுத்து, பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் ஆய்வு செய்ய புதிய கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். இந்த படம் தொடர்பாக புகார் வந்துள்ளதால், புதிய சென்சார் குழு இந்த படத்தை மீண்டும் பார்க்க உள்ளது. அதனால் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
| இதையும் படிங்க: கரூர் சம்பவம்: விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் |
அதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தை வெளியிட சில நாட்கள் மட்டுமே உள்ளன. புதிய கமிட்டிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வழக்கு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்து பார்த்து, உரிய முடிவு எடுக்க வேண்டும். தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் படத்தை திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மத்திய தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை (ஜனவரி 7)-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், சில நாட்களுக்கு முன் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

