ETV Bharat / state

சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு - காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அவரது தாயார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 2:34 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: யூ டியூபர் சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறினால் அதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு, காவல் துறை மற்றும் அரசியல்வாதிகள் மீது தனது யூ டியூப் சேனலில் கடுமையான விமர்சனங்களை வைத்ததால், யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.

இதில், மருத்துவ காரணங்களுக்காக சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தாயார் கமலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு மார்ச் 25-ஆம் தேதி வரை 3 மாதங்கள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சைதாப்பேட்டை காவல் துறை ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மதுபோதையில் போலீசாரை அரிவாளை கொண்டு தாக்க முயற்சி - கோவில்பட்டியில் 7 இளைஞர்கள் கைது

அந்த மனுவில், ‘சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய போது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை அவர் மீறியுள்ளார். மேலும், அவருக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். தொடர்ந்து, அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவக் குழு அமைக்க தயாராக உள்ளோம்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், சவுக்கு சங்கர் சாட்சிகளை மிரட்டி தொடர்ந்து தனது யூ டியூப்பில் பேசி வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்று இப்படி செய்யலாமா? என சவுக்கு சங்கருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல் துறை சேகரித்து வைக்குமாறு அறிவுறுத்தினர்.

மேலும், மனு குறித்து சவுக்கு சங்கரின் தாயார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.