ETV Bharat / state

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக விற்பனைக்கு தடை

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை கண்காட்சியில் விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 3:59 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதித்ததுடன், அனைத்து புத்தகங்களையும் பறிமுதல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக் காட்டி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக "திருப்பரங்குன்றம் விவகாரம், சுவாமிநாதன் நீதிபதியா? ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?" என்ற பெயரிலான புத்தகம், சென்னை 49-வது புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என வேலூரை சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், ‘புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகத்தை விற்க அனுமதித்தால், அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதைப் போல் ஆகிவிடும். ஆகையால், இந்த புத்தகத்தை விற்க அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு மனு அனுப்பியும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த புத்தகத்தை பறிமுதல் செய்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, “புத்தகத்தில் நீதிபதியை களங்கப்படுத்தும் வகையில் வார்த்தைகள் உள்ளன. எனவே, இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “மிகவும் அவதூறான, களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தியிருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா?” என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, மிகத் தீவிரமான இந்த விவகாரம் தொடர்பான புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கண்காட்சியில் இந்த புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது? எனவும் கேள்விகளை அடுக்கினார். மேலும், அறிவுசார் தளமான புத்தகக் கண்காட்சியில், இது மாதிரியான செயல்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'ஜல்லிக்கட்டு போட்டி ஒன்றும் ஐபிஎல் மேட்ச் கிடையாது' - நீதிபதிகள் கருத்து

அதையடுத்து, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “புத்தகக் கண்காட்சி நாளை முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இது போன்ற செயல்களை முதலமைச்சரும் விரும்பவில்லை. புத்தக கண்காட்சி அரசால் நடத்தப்படவில்லை, பதிப்பாளர்களால் நடத்தப்படுகிறது. புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் விற்கப்படாது என்பது உறுதி செய்யப்படும். அதற்கேற்ப காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி தெரிவித்தார்.

இதையடுத்து, புத்தக பதிப்பாளரான கீழைக்காற்று நிறுவனம் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க பதிப்பகத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், புத்தகத்தைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை உறுதி செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.