ETV Bharat / state

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (கோப்புப்படம்)
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள முருகன் கோயில்- கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 11:25 AM IST

3 Min Read
Choose ETV Bharat

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்ஹாவுக்கு எதிரே உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் நடைபெற்று வந்தது. கோயில் நிர்வாகம், தர்ஹா, மாவட்ட ஆட்சியர், காவல் துறை என பல்வேறு தரப்பிலும் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை நீதிபதிகள் கேட்டிருந்தனர். இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமன் ஆஜராகி வாதாடினார்.

அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்திருந்தனர். ஆனால் ஒரு நாள் முன்பாக இன்று (ஜன 6) இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் மலை வரைபடம்
நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் மலை வரைபடம் (ETV Bharat Tamil Nadu)

நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்பட தமிழக அரசே காரணம் என குற்றம்சாட்டினர். மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்ஹாவுக்கு எதிரே உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, அரசியல் காரணங்களுக்காக செயல்பட்டுள்ளது என்றும், இந்த தூண் தேவஸ்தான இடத்தில் தான் உள்ளது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் தான் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பரங்குன்ற தீபத்தூண்
நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீபத்தூண் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: 1. பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் - ஜனவரி 8 இல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

2. பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிரான மனு; விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

  • ஆகம விதிகளின்படி கருவறையில் உள்ள தெய்வத்திற்கு நேராக இல்லாத இடத்தில் விளக்கு ஏற்றுவது ஏற்கத்தக்கது அல்ல என்பதை நிரூபிக்க மேல்முறையீட்டாளர்கள் தவறி விட்டனர்.
  • அதே போல் திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் தீபம் ஏற்றுவது வழக்கத்தில் இல்லை என்பதையும் நிரூபிக்கவில்லை.
  • ஒரு ஆண்டின் குறிப்பிட்ட நாளில் தேவஸ்தானத்தின் பிரதிநிதிகளை மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கேற்ற அனுமதித்தால், பொது அமைதி பாதிக்கப்படும் என்ற அரசின் வாதம் நகைப்புக்குரியதாகவும், நம்ப முடியாத வகையிலும் உள்ளது. அரசு ஊக்குவித்தால் மட்டுமே இது போன்ற குழப்பம் ஏற்படும்.
  • அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற அரசு இத்தகைய நிலைக்கு செல்லக் கூடாது.
  • மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது வக்ஃபு வாரியம் தரப்பில் தூண் தர்ஹாவுக்கு சொந்தமானது என்ற தவறான வாதம் முன்வைக்கப்பட்டது.
  • 1958 ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பொது அமைதிக்கு இடையூறு ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்திய அச்சம் அவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட கற்பனை பூதமே தவிர வேறில்லை. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராக நிறுத்துவதற்காகவே இவ்வாறு காட்டப்படுகிறது.
  • தேவஸ்தானத்தில் இருந்து சிலர் மட்டும் விளக்கேற்றுவதற்காக தூணுக்கு செல்லவும், பக்தர்கள் மலையடிவாரத்தில் இருந்து வழிபடவும் அனுமதிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று அல்ல.
  • இதனால் பிரச்சினை ஏற்படும் எனக் கூறுவது மாவட்ட நிர்வாகத்தால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத நிலையை காட்டுகிறது அல்லது இரு சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க தயங்கும் நிலையை காட்டுகிறது.
  • இரு சமூகங்களுக்கிடையேயான வேறுபாடுகளை களைய இதனை ஒரு வாய்ப்பாக மாநில அரசு பயன்படுத்தியிருக்க வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம், இரு தரப்பினருக்கும் இடையேயான இடைவெளியை குறைத்திருக்கலாம். ஆனால் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அமைதி கூட்டங்கள் இரு தரப்பினருக்கு இடையே பிளவை அதிகரித்துள்ளன.
  • வரும் காலங்களில் ஒவ்வொரு சமூகத்திற்குரிய விழாக்கள் நடைபெறும் போதெல்லாம் தற்போது வழங்கப்படும் உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தினால் சண்டை சச்சரவுகள் வராது.

இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவு

  1. சிக்கந்தர் தர்ஹாவுக்கு எதிரே உள்ள தூணில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற வேண்டும்.
  2. திருப்பரங்குன்றம் பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதி என்பதால் அங்குள்ள உள்ள நினைவுச் சின்னங்களை பாதுகாக்க தேவையான மற்றும் பொருத்தமான நிபந்தனைகளை இந்திய தொல்லியல் துறை வகுக்க வேண்டும்.
  3. கார்த்திகை திருநாளை முன்னிட்டு தேவஸ்தானம் தங்களது குழுவின் மூலமாக தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.
  4. தேவஸ்தான குழுவுடன் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதிக்கக் கூடாது.
  5. எத்தனை பேர் செல்லலாம் என்பது தொடர்பாக தொல்லியல் துறை மற்றும் காவல் துறையுடன் தேவஸ்தானம் ஆலோசனை செய்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.
  6. மாவட்ட ஆட்சியர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.