ETV Bharat / state

''பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிப்பதா?'' - அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி

இது சட்டத்திற்கு புறம்பானது. மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 5, 2026 at 8:31 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த அமீர் ஆலம் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ''தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, மாணவர்கள் மீது வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? தாய், தந்தையர் சிறையில் உள்ளனரா? அவர்கள் அகதிகளா? என்பன உள்ளிட்ட விபரங்கள் தலைமையாசிரியர்கள் மூலம் சேகரித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இது சட்டத்திற்கு புறம்பானது.

வகுப்பறையில் இந்த விபரங்களை சேகரிப்பதால் ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட தகவல்களும் மற்ற மாணவர்களுக்கு தெரிய வரும். இதில் சமூக சூழலை பாதிக்காதவாறு ரகசியம் காக்கப்பட வேண்டும். எதற்காக இத்தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என்றும் தெளிவுப்படுத்தவில்லை. இந்த நடைமுறைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' என, அமீர் ஆலம் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: ஸ்லோ மோடில் தேர்தல் ஆணையம் - அதிமுக இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் புதிய மனு தாக்கல்

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ''இது சட்டத்திற்கு புறம்பானது. மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது'' என்று தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.