குதிரை பேரம் விவகாரம்: கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
குதிரை பேரம் விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக தவெக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தால், மக்களிடையே மாறுபட்ட கருத்து ஏற்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Published : July 8, 2026 at 8:32 PM IST
சென்னை: குதிரை பேரம் செய்ததாக கைது செய்யப்பட்ட 5 பேரை, இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய திருவல்லிக்கேணி காவல் துறையினருக்கு அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப் பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், அதற்கு ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும்படி நடந்து கொள்ள வேண்டும். அதற்கு சன்மானமாக ரூ. 35 கோடி வரை தருவதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் சிலர் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, சென்னை பெருநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி காவல் துறையினர், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, திருவல்லிக்கேணி காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு தொடர்ந்து விசாரணை நடத்தினால் தான் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும். இந்த வழக்கில் பல குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.
| இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை |
சபாநாயகருக்கு எதிராக தவெக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தால், மக்களிடையே மாறுபட்ட கருத்து ஏற்படும். சொந்த கட்சி உறுப்பினர்களே சபாநாயாகரை விரும்பவில்லை என பேச தொடங்கி, அது கட்சியினர் மற்றும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கைது செய்யப்பட்ட நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகியோரின் காவல் விசாரணை கோரிய மனுவுடன், திருநாவுக்கரசு மற்றும் தியாகராஜனை காவல் கோரிய மனுவையும் சேர்த்து விசாரித்து இன்று (ஜூலை 8) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், 5 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு அனுமதி வழங்கி நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

