ETV Bharat / state

மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜாய் கிரிசில்டாவுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதில் தான் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்பதாக ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
உயர்நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 1:52 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக் கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாய் கிரிசில்டா தரப்பில், தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு, திருமணம் செய்து உடன் வாழ்வதாக கூறி ரங்கராஜ் ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் சமுதாயத்தில் செல்வாக்கான மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிரான புகார் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், எந்த விசாரணையும் நடத்தாமல், அவரை அனுப்பி வைத்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிரிசில்டாவை 8 மணி நேரமாக காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையம் உத்தரவிட்டும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிரிசில்டா தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். டி.என்.ஏ பரிசோதனையில் தான் தான் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: போதை பொருள் விற்பனை வழக்கில் முக்கிய புள்ளி கைது; 'லுக் அவுட் நோட்டீஸ்' நடவடிக்கையில் சிக்கிய பின்னணி

அதே நேரத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் மோசமான வீடியோக்களை பரப்பி, யூடியூப் சேனல்கள் பணமாக்கி வருகின்றன. அத்தகைய யூடியூப் சேனல்கள் தங்களை பற்றி அவதூறான வீடியோக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் இன்று தீர்ப்பளித்தார். அப்போது அவர், மாதம்பட்டி ரங்கராஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.