கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் புகார் அளிக்க முடியாமல் இருந்த நிலையை மாற்றி, இனி காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published : September 1, 2026 at 10:40 PM IST
|Updated : September 1, 2026 at 11:20 PM IST
சென்னை: டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுகளை மீறும் ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஜி.தேவராஜன், பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாகவும், அதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில், கூடுதல் கட்டணத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதை பின்பற்ற அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்தது.
மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பில் வழங்குவதாகவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த வரிசை முறை பின்பற்றப்படுவதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கடைகளும் கடுமையாக பின்பற்ற வேண்டும். மனுதாரர் தேவராஜன் அளித்த புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு 8 வாரங்களில் அளிக்க வேண்டும்” என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
| இதையும் படிங்க: ஆர்டிஐ கேள்விகளுக்கு 2 ஆண்டுகள் கழித்து பதில் தந்தது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி |
மேலும், அந்த அறிக்கையின் படி, ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும், தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இனி டாஸ்மாக் கடைகளில் பில் வழங்காமலோ? அல்லது வழிகாட்டு நெறிமுறைகளை மீறியோ? ஊழியர்கள் நடந்து கொள்வதாக புகார் வந்தால் அதன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் புகார் அளிக்க முடியாமல் இருந்த நிலையை மாற்றி, மதுப்பிரியர்கள் இனி காவல்நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கலாம். டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தடுக்கும் வகையிலும், கூட்ட நெரிசலை தடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் கடைகளில் தகுந்த காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

