ETV Bharat / state

சம்மன் பெற 2 மணி நேரமா? லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருணை நீதிமன்றத்தில் காத்திருக்க வைத்த நீதிபதிகள்

“சம்மன் வழங்கிய அதிகாரி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அதுவரை இந்த வழக்கை விசாரிக்க முடியாது” என நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அருண் ஐபிஎஸ் - கோப்புப் படம்
அருண் ஐபிஎஸ் - கோப்புப் படம் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2026 at 1:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வழங்க சென்ற அதிகாரியை 2 மணி நேரம் காத்திருக்க வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் நீதிமன்ற அறையில் காத்திருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கொளத்தூர் ராமதாஸ் நகரில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான 2 ஏக்கர் 10 சென்ட் நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, அதில் 78 குடியிருப்புகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா ஒப்பந்தம் செய்திருந்தார்.

குடியிருப்பு ஒதுக்கீடு வழக்கு

ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட 78 குடியிருப்புகளை போலி கையெழுத்திட்டு, 43 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தோஷ் சர்மா பிணையில் விடுதலையான நிலையில், வாங்கிய குடியிருப்புகளை ஒப்படைக்காமல் ஏமாற்றிவிட்டதாக, 2025-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

குண்டர் சட்டம்

அதில், “2019-2023 ஆண்டுகளுக்கு இடையில் நடந்த சம்பவம் தொடர்பாக 2025-ல் அதாவது 2 ஆண்டுகள் தாமதமாக சந்தோஷ் சர்மா குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரே குற்ற சம்பவத்திற்கு கைதாகி பிணையில் விடுதலை ஆன நிலையில் அதே குற்றச்சாட்டுக்கு மேலும் இரு வழக்குகளை பதிவு செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது சட்டவிரோதமானது” என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், தனது மகள் வர்ஷா சர்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மகளை கவனித்துக் கொள்ள தனது கணவருக்கு 4 வாரம் பிணை வழங்க வேண்டும் என சந்தோஷ் சர்மாவின் மனைவி கல்பனா சர்மா இடைக்கால கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார்.

அருண் ஐபிஎஸ் காத்திருக்க வேண்டும்

இந்த மனு நீதிபதிகள் ஜி. ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த காவல்துறை ஆணையர் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக அருண் ஐபிஎஸ் நியமனம்

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான அருண் ஐ.பி.எஸ்-யிடம், நீதிமன்றத்தின் சம்மனை நேற்று (மே 26) வழங்க சென்ற அதிகாரியை பிற்பகல் 3.05 முதல் 5.15 வரை சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்தது ஏன்? நீதிமன்ற உத்தரவின் படி சம்மன் வழங்க சென்ற அதிகாரியை ஏன் இவ்வளவு நேரம் காத்திருக்க வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், “சம்மன் வழங்கிய அதிகாரி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அதுவரை இந்த வழக்கை விசாரிக்க முடியாது. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரக பதவியேற்றுள்ள அருண் ஐ.பி.எஸ் அதுவரை நீதிமன்றத்தில் காத்திருக்க வேண்டும்” என அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.