4 பேர் போராட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி - உயர் நீதிமன்றம் உத்தரவு!
உழைப்போர் உரிமை இயக்கத்தினர் நடத்தும் போராட்டம் பொதுமக்களுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் எந்த இடையூறையும் ஏற்படுத்தக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Published : November 15, 2025 at 3:09 PM IST
சென்னை: துாய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, உழைப்போர் உரிமை இயக்கத்தை சேர்ந்த 4 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் துாய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து காலவரயரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த, உழைப்போர் உரிமை இயக்கத்தினர் அனுமதி கோரி விண்ணப்பித்தனர். அதனை சென்னை காவல்துறையினர் நிராகரித்தனர். இந்த உத்தரவை ரத்து செய்து, அமைதியான முறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, இயக்கத்தின் மாநில பொருளாளர் ஆர்.மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், “போராட்டாத்திற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றாலும், அவை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்த அனுமதிப்பது பொது மக்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, அனுமதி மறுக்கப்பட்டது” என தெரிவித்தார்.
இதனையடுத்து, உழைப்போர் உரிமை இயக்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கு.பாரதி, “நான்கு உறுப்பினர்கள் மட்டும் அம்பத்தூரில் உள்ள தங்களது அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்படுள்ளது. போராட்டம் நடத்துவது மற்றும் ஒன்று கூடும் உரிமை ஜனநாயக அமைப்பின் அடிப்படை அம்சமாகும். நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அம்பத்தூரில் போராட்டம் நடத்த அனுமதி கோரியதால், ஆவடி காவல் ஆணையர், அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்ததுடன், மனுதாரருக்கு உரிய அனுமதியை வழங்கும்படி உத்தரவிட்டார்.
மேலும், அம்பத்தூர் அலுவலகத்தில் ஜெனோவா, பாரதி, கீதா, வசந்தி ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடரலாம். 4 பேரில் ஒருவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றால், அவருக்கு பதில் வேறு ஒருவர் உண்ணாவிரதத்தை தொடரலாம். அதே சமயம் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து, உண்ணாவிரத அரங்கில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டக் கூடாது. வளாகத்திற்கு வெளியே பந்தல் அல்லது ஷாமியானா, நாற்காலிகள் போன்றவற்றை அமைக்கக் கூடாது. அப்பகுதியில் பொதுமக்களுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி, உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நலத்தை தினமும் பரிசோதிக்க அரசு மருத்துவரை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

