ETV Bharat / state

மனைவி தொடர்ந்த விவகாரத்து வழக்கு; பிரபல தொழிலதிபர் ஶ்ரீதர் வேம்பு பதிலளிக்க மார்ச் 11 வரை அவகாசம்

பிரபல தொழிலதிபர் ஶ்ரீதர் வேம்புவின் மனைவி பிரமிளா சீனிவாசன் விவாகரத்து கோரி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஶ்ரீதர் வேம்பு
ஶ்ரீதர் வேம்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 5:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: பிரபல தொழிலதிபர் ஶ்ரீதர் வேம்புவின் மனைவி பிரமிளா சீனிவாசன் தொடர்ந்த விவாகரத்து வழக்கு தொடர்பான மனுவுக்கு ஶ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் பதிலளிக்க மார்ச் 11 வரை கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவின் மனைவி பிரமிளா சீனிவாசன் விவாகரத்து கோரி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர், கடந்த 1993 ஆம் ஆண்டு ஸ்ரீதர் வேம்புவை திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் சுமார் 30 ஆண்டுகள் கலிஃபோர்னியாவில் வசித்து வந்தோம். இந்நிலையில் அவர் தன்னையும், மாற்றுத்திறனாளியான தனது மகனையும் கைவிட்டு விட்டு 2019ம் ஆண்டு இந்தியா திரும்பினார். அதனையடுத்து 2021-ல் விவாகரத்து கோரி கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்கில் கடந்த 2025 அக்டோபர் 2-ம் தேதி, திருநெல்வேலியில் உள்ள ஶ்ரீதர் வேம்பு, அவரது நிறுவன அதிகாரி ராதா வேம்பு உள்ளிட்ட 10 பேரின் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை நீதிமன்றம் தனித்தனியாக கேட்டுள்ளது.

இதையும் படிங்க: விவாகரத்து வழக்கு: ஶ்ரீதர் வேம்புக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

அதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வரும் ஶ்ரீதர் வேம்பு சென்னை வேளச்சேரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் குடியிருந்து வரும் அவருடைய உறவினர்கள் மற்றும் சோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியின் வாக்குமூலங்களை பதிவு செய்து அவற்றை அமெரிக்க நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது வழக்கறிஞரை நீதிமன்ற ஆணையராக நியமிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றாலும், ஶ்ரீதர் வேம்பு மற்றும் நிறுவன அதிகாரிகள் இந்தியாவில் இருப்பதால் அவர்களிடம் இருந்து ஆவணங்களை சேகரிக்க உத்தரவிட வேண்டும். ஆணையர் முன்னிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தனது வழக்கறிஞர், காணொளிக் காட்சி மூலம் சாட்சிகளை விசாரிக்கவும், குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்க வேண்டும். வாக்குமூலங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' எனவும் பிரமிளா சீனிவாசன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.தனபால் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு, அவரது உறவினர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 23 ஆம் தேதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீதர் வேம்பு, அவரது உறவினர்கள் மற்றும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் பதில் மனு தாக்கல் உத்தரவிட்டார்.