மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பேருந்து விபத்து - லாரி மீது மோதி நொறுங்கியது
திருப்பத்தூர் அருகே மேல்மருவத்தூருக்கு பக்தர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது.

Published : January 5, 2026 at 10:14 AM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே லாரி மீது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் (35). லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர், நேற்றிரவு ஜேசிபி இயந்திரத்தை ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல பூவரசன் முயன்றுள்ளார்.
அப்போது அவர் ஓட்டி வந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த லாரி சில மீட்டர் தூரம் தறிகெட்டு ஓடி, பின்னர், சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளாகி நின்றது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர், லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜோலார்பேட்டையை அடுத்த வேட்டப்பட்டு பகுதியில் இருந்து மேல்மருவத்தூருக்கு பக்தர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து, எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி அதிவேகமாக மோதியது.

இதில், பேருந்தின் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்ட ஜோலார்பேட்டை காவல் துறையினர், அவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

