ETV Bharat / state

மேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

"காவிரி படுகையில் அமைந்துள்ள பிற மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ள கூடாது; உச்சநீதிமன்ற தீர்ப்பை எவ்வகையிலும் மீறக்கூடாது என கர்நாடக அரசுக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டுமென முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2026 at 4:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு பூமி பூஜை நடத்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்கத்திற்கான 'பூமி பூஜை' நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இது தொடர்பாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பொதுவெளியில் தெரிவித்திருப்பது, வாழ்வாதாரத்திற்காக காவிரி ஆற்றையே நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.. அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா ஏற்பு: என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்

காவிரி நதிநீர் பிரச்சினை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இப்பிரச்சினைக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னரே தீர்வு காணப்பட்டது.

கடந்த 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. காவிரி நடுவர் மன்றம் அனுமதித்த திட்டங்களின் பட்டியலில் மேகதாது திட்டம் இடம்பெறவில்லை. இதனை உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

காவிரிப் படுகையானது நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகை என்பதைக் கருத்தில் கொண்டு, கிடைக்கக்கூடிய நீர் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் கூடுதல் நீரைப் பயன்படுத்துவதற்கோ அல்லது புதிய பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்கோ எவ்வித வாய்ப்பும் இல்லை.

எனவே, உச்ச நீதிமன்றம் உறுதி செய்த, தீர்ப்பாயம் அனுமதித்த திட்டங்களைத் தவிர்த்து, காவிரி ஆறு அல்லது அதன் துணை நதிகளின் குறுக்கே வேறு எந்த புதிய திட்டத்தையும் திட்டமிடுவது, உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தலையிடுவதற்குச் சமமானதாகும்.

கர்நாடகா - தமிழ்நாடு எல்லையின் மிக அருகிலேயே, 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஒரு புதிய மேகதாது திட்டத்தை முன்மொழிவதன் மூலம் கர்நாடக மாநிலம் இம்முயற்சியை மேற்கொள்வதாகத் தமிழ்நாடு கருதுகிறது.

மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதியின் மேல்பகுதியில் அமைந்துள்ள மாநிலமானது, கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மாநிலத்திற்குத் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத்தைப் பாதிக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது உச்சநீதிமன்றம் கடந்த 16.02.2018 அன்று அறுதியிட்டுத் தீர்ப்பளித்துள்ளது. எனவே, கர்நாடக மாநிலம் ஒரு புதிய நீர்த்தேக்கத்தைக் கட்டுவதற்கு முன்மொழிந்துள்ள இச்செயலானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீதான ஒரு தெளிவான மீறலாகவே அமையும்.

இது தொடர்பாக, கர்நாடக மாநிலம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு வரையறைகள் பெற முயன்ற போது, ​​சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவானது, மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள் உள்ளதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஒரு இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து, அக்கோரிக்கையைத் திருப்பியனுப்பியது.

மேலும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு வரையறைகளை இதுவரை வழங்கக்கூட இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, மேகதாது திட்டப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல கர்நாடக மாநிலம் மேற்கொள்ளும் முயற்சி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமல்லாமல், தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களையும் அப்பட்டமாக மீறும் செயலாகும்.

இதையும் படிங்க.. பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை முதல்வர் விஜய் மறுபரிசீலினை செய்ய வேண்டும்; பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

இத்தகைய சூழலில், உச்ச நீதிமன்றத்தின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு இணங்கச் செயல்படுத்தும் கடமை கொண்ட மத்திய ஜல் சக்தி அமைச்சகமும் மத்திய நீர்வள ஆணையமும்(CWC) தமிழ்நாடு அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்காமலேயே, கர்நாடகாவின் மேகதாது திட்ட முன்மொழிவை ஏற்றுப் பரிசீலித்து வருவது வியப்பளிக்கிறது.

இந்த சூழலில், மேகதாது திட்ட முன்மொழிவின் விரிவான திட்ட அறிக்கையானது, காவிரி நடுவர் மன்றம் (CWDT) 05.02.2007 அன்று வெளியிட்ட இறுதி ஆணைக்கும், உச்சநீதிமன்றம் கடந்த 16.02.2018 அன்று வெளியிட்ட தீர்ப்புக்கும் முரணாக அமைந்திருப்பதால், அத்திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் (CWC) ஆகியவற்றில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், காவிரி படுகையில் அமைந்துள்ள பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எவ்வகையிலும் மீறக்கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும்" என்றும் அந்த கடிதத்தில் முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.