ETV Bharat / state

மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணத் தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் ஸ்ரீநாத் அவையில் அறிவிப்பு

மீன்பிடி தடை காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.8000 என சுமார் 1,87,000 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஸ்ரீநாத் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஸ்ரீநாத்
அமைச்சர் ஸ்ரீநாத் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 7:35 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணத்தொகை ரூ.8,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன்வளத்துறை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பதிலளித்து பேசியபோது, "நடப்பாண்டில் மீன் பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான நிவாரணத் தொகையாக மீனவ குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 என சுமார் 1,87,000 மீனவ குடும்பங்கள் ரூ.149 கோடி மதிப்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தின் பொழுது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை எனவும், அத்தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் மீனவ சங்க பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தது.

குறிப்பாக வடகிழக்கு பருவமழை போன்ற மீன்பிடி குறைவு காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக அண்மையில் உயர்த்தப்பட்டு, இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வரும் காலங்களில் மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணத் தொகையை ரூ.8 ஆயிரத்தில் இருந்து, ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரவித்தார். முன்னதாக மீன்வளத்துறை தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புக்களை அவர் வெளியிட்டார்.

அமைச்சர் ஸ்ரீநாத் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

  • கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை, ரூபாய் 350/- லிருந்து ரூபாய் 600/- ஆக உயர்த்தப்படும்.
  • கடல் மீன்வளத்தை பெருக்கும் நோக்கில், கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும்.
  • கடலில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் வளர்ச்சி முடக்கப்பட்ட மீன் விரலிகள் உற்பத்தி பிரிவு புதியதாக நிறுவப்படும்.
  • அரசு மீன் குஞ்சு நிலையங்களை வலுப்படுத்தும் நோக்கில், தரமான, வீரியமிக்க சினை மீன்கள் உருவாக்கப்படும்.
  • உவர்நீர் மீன் வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்புக் கொள்கை உருவாக்கப்படும்.
  • நீர்வாழ் மண்டலங்களை நிறுவிட, அறிவியல் பூர்வமான வரைப்படம் மற்றும் கடலோர வளங்கள் மதிப்பீடு செய்யப்படும் என 24 முக்கிய அறிவிப்புக்களை அமைச்சர் ஸ்ரீநாத் வெளியிட்டார்.