‘முதல்வர் விஜய்க்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை கனவில் கூட இருக்காது’ - வைகோ கருத்து
இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி தான் இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் உள்ளது என்றும், அந்த வகையில் ராகுல் காந்திய தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும் என வைகோ கூறியுள்ளார்.

Published : August 31, 2026 at 1:51 PM IST
திருநெல்வேலி: முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கற்பனையில் கூட இருக்காது என்பதே தன்னுடைய கருத்து என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழ்நாடு அரசின் ஓராண்டு கால செயல்பாடுகளுக்கு 100-க்கு 80 விழுக்காடு மதிப்பெண் வழங்குவேன். குறிப்பாக, ஆர்.டி.ஓ அலுவலகங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் முன்பு இருந்த லஞ்ச மற்றும் கமிஷன் முறைகள் தற்போது பெருமளவு ஒழிக்கப்பட்டு, நேர்மையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
ஊழலை ஒழிப்பது என்பது எளிதான காரியம் அல்ல என்ற போதிலும், தற்போதைய அரசு இதில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என கூறினார்.
விஜய்க்கு பிரதமர் ஆசை இல்லை
அடுத்த பிரதமர் வேட்பாளர் விஜய் என த.வெ.க-வினர் கூறுவதற்கு, காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, “பிரதமராக வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு எண்ணமோ, நோக்கமோ துளியளவும் கிடையாது. அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பேசும்போது, யோசனை செய்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி தான் இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் உள்ளது.
அந்த அணியின் வேட்பாளர் தான் பிரதமர் வேட்பாளராக என்ற வகையில், ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும்.
இதற்கு வேறு வழியே கிடையாது. முதலமைச்சர் விஜய்க்கு கற்பனையில் கூட அப்படி ஒரு எண்ணம் இருக்காது என்பது என்னுடைய கருத்து” என்றார்.
தொகுதி மறுவரையறை ஆபத்தில் முடியும்
முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்பு குறைக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, ”என்ன காரணம் என்று தெரியவில்லை,
அந்த பாதுகாப்பை மீண்டும் கொடுப்பது தான் சரியாக இருக்கும்” என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படுவதை வரவேற்கிறேன், இதன்மூலம் மக்கள் பிரதிநிதிகள் அவையில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடிகிறது.
தொகுதி மறுவரையறை குறித்து பேசுகையில், “மத்திய அரசு திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன். நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.
மேகதாது அணைக்கு மத்திய அரசு ஆதரவு?
இது தென் மாநிலங்களின் உரிமைகளையும், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் முற்றிலுமாகப் பாதிக்கும் என்பதால், இந்த முயற்சியை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்” என தெரிவித்தார். காவிரி பிரச்சனை குறித்து பேசுகையில், ”மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு மத்திய அரசு பின்னணியில் இருந்து மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டப் பகுதிகள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. இத்தகைய பேராபத்தைத் தடுக்க, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” கூறினார்.
| இதையும் படிங்க: யார் என்ன சொன்னாலும் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் - அமைச்சர் ராஜேஷ்குமார் உறுதி |
மேலும் பேசிய வைகோ, “அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் பெரியார், அம்பேத்கர், மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் விடுபட்டது வருத்தமளிக்கிறது. நிர்வாக ரீதியாக நடைபெற்ற இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அங்கு சிக்கியுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்பதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருவதாகவும், எஞ்சியவர்களை விரைவாக மீட்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

