ETV Bharat / state

தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை: வைகோ தகவல்

கலைஞரால் மாநிலங்களவைக்கு மூன்று முறை அனுப்பப்பட்டவன் என்ற நன்றி உணர்ச்சியை நான் எந்நாளும் மறக்கவில்லை என வைகோ குறிப்பிட்டார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 3:56 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கலைஞரின் புகழ், விண்ணும் மண்ணும், நதியும் கடலும், தமிழகமும் இருக்கும் வரை நிலைபெற்று வாழும். மூக்கடல் சந்திக்கும் இடத்தில் வள்ளுவனுக்கு உலகில் எங்கும் இல்லாத வகையில் சிலை எழுப்பினார். பெரியாரின் கனவுகளை நினைவாக்கியவர் அவர். கருணாநிதியின் புகழ் வளரட்டும். அண்ணாவின் மரண சாசனமான மாநில சுயாட்சிக்கு ஆதரவை திரட்டியவர். இந்தியாவில் எங்கும் இல்லாத நேரத்தில் பெண்களுக்கு சொத்துரிமையை தமிழகத்தில் சட்டமாக்கியவர்.

கலை உலகில் பெரும் புரட்சியை பராசக்தி மூலமாக உருவாக்கினார் கலைஞர். 30 ஆண்டுகள் அவரால் வளர்ப்பிக்கப்பட்டவன் நான். என்னாலும் என் மனதில் இருந்து அதை அகற்றியதில்லை. கலைஞரால் மாநிலங்களவைக்கு மூன்று முறை அனுப்பப்பட்டவன் என்ற நன்றி உணர்ச்சியை நான் எந்நாளும் என் மனதின் அடிவாரத்தில் மறக்காமல் வைத்திருக்கிறேன்" என்றார்.

தவெகவுக்கு மதிமுக ஆதரவு தெரிவிக்கும் என்பது எதிர்பார்த்த விஷயம் தான், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று திமுகவை சேர்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய வைகோ, "தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பேன் என்ற முடிவை இதுவரை எடுக்கவில்லை. திமுகவை சேர்ந்த தோழர்களுக்கு இந்த சொல்லையே தாங்கிக் கொள்ள முடியாமல் கோபம் ஏற்படுகிறது என்று சொன்னால், அதிக இடங்களை பெற்ற மற்றவர்கள் எல்லாம், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவிற்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையிலும் சேர்ந்துவிட்டார்களே? ஆனால் அப்படிப்பட்ட எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லையே. திமுக சகோதரர்கள் கோபப்பட்டாலும் அது உரிமையோடு அவர்கள் கொள்ளும் கோபம் என்று நான் எடுத்துக் கொள்வேன்" என்றார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சட்டமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டதால் மதிமுக தொண்டர்கள் மனவருத்தம் அடைந்தனர் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.