புடவையை கயிறாக மாற்றி சக பயணிகளை காப்பாற்றினோம் - நேபாள 'திக் திக்' நிமிட அனுபவங்களை பகிர்ந்த மயிலாடுதுறை தம்பதி
நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பி சொந்த ஊர் திரும்பிய ரெத்தினகுமார், பூங்குழலி தம்பதியருக்கு மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Published : August 31, 2026 at 8:53 PM IST
நேபாள வெள்ளத்தின்போது எனது புடவையை கயிறாக மாற்றி பேருந்தில் இருந்தவர்களை காப்பாற்றியதாக மயிலாடுதுறையை சேர்ந்த பூங்குழலி கூறுகிறார். மேலும் அங்கு என்ன நடந்தது என்ற திக்.. திக்.. நிமிட அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்
நேபாளத்தில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளம் அந்நாட்டையே புரட்டிப் போட்டது. இதில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ள நிலையில், மாயமான நூற்றுக்கணக்கான மக்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உலகையே உலுக்கிய இந்த பேரிடரில் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. அதேசமயம் பலர் உயிருடன் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அவர்களது உறவினர்களை நிம்மதி பெருமூச்சு அடைய செய்துள்ளது.
தப்பிப் பிழைத்தவர்களில் முதற்கட்டமாக காத்மாண்டுவிலிருந்து டெல்லி வழியாக, ஆகஸ்ட் 28-ம் தேதி, 21 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ஆகஸ்ட் 31 அன்று மேலும் 28 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, டெல்லி வந்தடைந்தனர்.
சென்னை வந்த தமிழர்கள்
இதற்கிடையே, சென்னை வந்த 21 பேருக்கும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களில், மயிலாடுதுறையை சேர்ந்த ரத்தினகுமார் (65), பூங்குழலி (61) தம்பதியும் அடங்குவர்.
அதாவது, மயிலாடுதுறையிலிருந்து 7 பேர் உள்ளிட்ட 57 நபர்கள் கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் உள்ள சூப்பர் யாத்திரை ஏஜென்சி ஏற்பாடு செய்த யாத்திரைக்கு, மூன்று பேருந்துகளில் 13 நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றனர். இதுபோன்ற சூழலில், கடந்த 26ஆம் தேதி நேபாளத்தில் திடீர் காட்டாற்று வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது.
அதிலிருந்து மயிலாடுதுறையை சேர்ந்த 7 பேரில் மணிமேகலை, ரெத்தினகுமார், பொன் பூங்குழலி ஆகிய மூவர் உள்ளிட்ட 21 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே சமயம், அவர்களுடன் பயணித்த மயிலாடுதுறை சேர்ந்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம், வெங்கட்ராமன் ராஜேஸ்வரி, புஷ்பலதா உள்ளிட்ட 36 பேரின் நிலை குறித்து தற்போது வரை எந்த தகவலும் தெரியவில்லை.
கண்ணீர் மல்க வரவேற்பு
இந்நிலையில், மயிலாடுதுறை தில்லை நகரை சேர்ந்த ரத்தினகுமார் (65), பூங்குழலி (61) தம்பதியினர் இன்று சொந்த ஊர் திரும்பினர். அவர்களை கண்ட உறவினர்கள் அழுதுகொண்டே மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். உறவினர்களைக் கண்டதும் அவர்களை கட்டி அனைத்து கண்ணீர் கடலில் நனைந்த ரத்தினகுமாரும், பூங்குழலியும் அங்கு நடந்த சம்பவத்தை செய்தியாளர்களிடம் விவரித்தனர்.
இதற்கிடையே, அவர்களது வீட்டிற்கு வந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன், மாவட்ட நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், “நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மற்றவர்களும் விரைவில் வீடு திரும்புவார்கள்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதையடுத்து, நேராக வீட்டின் பூஜை அறைக்கு சென்ற அந்த தம்பதி, தாங்கள் உயிர் தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், தங்களுடன் நேபாளம் வந்த 4 பேரும் விரைவில் வீடு திரும்ப வேண்டுமென மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
| இதையும் படிங்க: தமிழக பக்தர்கள் ஏன் நேபாளம் செல்கிறார்கள்? இதுதான் காரணமா? |
நேபாள பேரிடரில் தப்பியது எப்படி? என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூங்குழலி, “நாங்கள் சென்ற பேருந்தை திடீரென வெள்ளமும், மணல் பாறைகளும் சூழ்ந்தன. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒருவேளை பேருந்திலிருந்து கீழே இறங்கியிருந்தால், 21 பேருமே கணநேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருப்போம்.
அப்போது, எங்களது பயண ஏற்பாட்டாளர் டிரைவர் சீட்டில் அமர்ந்தார். ஒருவேளை அவர் வண்டியை எடுக்கப்போகிறாரா? என்றுதான் நினைத்தேன். வண்டி கீழே விழுந்தால் என்னவாகும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், டிரைவர் சீட்டின் கதவை திறந்து கீழே குதித்த அவர், அருகிலிருந்த மலையில் ஏறினார். அப்போதுதான் என்ன நடக்கிறது என்பதே தெரிந்தது.
அதன் பின்னர் சுதாரித்த அனைவரும், ஒவ்வொருவராக வெளியே குதித்தோம். கீழே சேறும் சகதியுமாக இருந்ததால், கால் அதில் மாட்டிக் கொண்டது. சிரமப்பட்டு அருகே இருந்த மலைக்கு சென்றுவிட்டோம். அது மண் நிறைந்த மலை என்பதால், செடியோடு பிடிங்கிக்கொண்டு வந்தது.
புடவையை கயிறாக மாற்றி காப்பாற்றினோம்
செங்குத்தான மலையில் ஏறித் தப்பிப்பதே ஒரே வழி என்ற நிலை வந்ததால், எப்படியோ மேலே ஏறி, அங்கிருந்தவர்களும் மேலே ஏற உதவினோம். குறிப்பாக, என்னுடைய புடவையை அவிழ்த்து, அதனை வலுவான கயிறாக மாற்றி, ஒவ்வொருவராகக் காப்பாற்றினோம்.
இருந்தாலும் 3 பேரால் மேலே ஏற முடியவில்லை. அப்போது எனது கணவர் ரத்தினகுமார் தான் கீழே குதித்து, மேலே ஏற முடியாதவர்களை தன் தோளில் ஏற்றி, அவர்களை மேலே தள்ளிவிட்டார். இதுபோன்ற இக்கட்டான சூழலில், அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியால் தப்பினோம். கடவுள்தான் எங்களை காப்பாற்றினார்.
பின்னர், அங்கிருந்து மண், கல் நிறைந்த கரடுமுரடான மலையின் மேல் ஏறி, அருகே இருந்த முகாமிற்கு சென்றோம். அங்கிருந்த இந்திய தூதரகம் தங்களை பத்திரமாக மீட்டு தாயகம் அனுப்பியது. அது மட்டுமின்றி, நேபாளம் அரசு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உதவியாலேயே பத்திரமாக வீடு திரும்பியுள்ளோம். அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தனர்.

