ETV Bharat / state

ஜனநாயக ரீதியில் கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு - காங்கிரஸ் எம்.பி சுதா

நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் கூட்டணி குறித்த சரியான முடிவினை ராகுல் காந்தி அறிவிப்பார்என சுதா எம்பி தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி ஆர் சுதா பேட்டி
காங்கிரஸ் எம்.பி ஆர் சுதா பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 6:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: ஜனநாயக ரீதியில் கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு என மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் சுதா கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “2028 மகாமக பெருவிழாவினை முன்னிட்டு ரயில்வே துறை சார்பில், பயணிகளுக்கு செய்துதர வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அண்மையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினோம்.

அதன்படி, தஞ்சாவூரில் இருந்து விழுப்புரம் வரை 2ஆவது கூடுதல் ரயில் பாதை அமைப்பதற்கு ஆய்வு நிறைவுற்று ரயில்வே வாரியத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே 2ஆவது கூடுதல் பாதை வருவது உறுதியாகியுள்ளது. நிதி அறிக்கையில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நம்புகிறோம்.

மேலும் 100 கோடி மதிப்பீட்டில் நூற்றாண்டுகள் பழமையான கும்பகோணம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதுடன், இந்த ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் சரக்கு கையாளும் வசதியினை முழுமையாக அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மாற்றிடவும், கூடுதல் நடைமேடைகள், அனைத்து நடைமேடைகளிலும் குடிநீர், கழிவறை வசதிகள், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதிகள், தற்போதுள்ள ஒரே நுழைவுபாதையை மாற்றி, இருபுறமும் நுழைவுபாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் தங்கிச் செல்ல வசதியாக பட்ஜெட் ஹோட்டல்களை கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் கட்டவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தொடர்ந்து பேசிய அவர், தனது பாராளுமன்ற கன்னி பேச்சியிலேயே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக திருவிழாவினை, தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தான் உள்ளது. இந்த கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை. மதசார்பின்மைக்கு எதிராக இருப்பவர்களை பொது எதிரியாக கருதி செயல்பட்டு வருகிறோம். எங்கள் கட்சியின் கூட்டணியை ராகுல்காந்தி, கட்சி தலைவர் கார்கே மற்றும் மாநில தலைமை இணைந்து முடிவு செய்வார்கள்” என்றார்.

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறிவருவது குறித்து கேட்டதற்கு, “காங்கிரஸ் கட்சியில், நிர்வாகிகள், தொண்டர்கள் ஜனநாயக ரீதியில் கருத்து கூற உரிமையுள்ளது. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப, நாட்டின் நலன் கருதியும், நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் கூட்டணி குறித்த சரியான முடிவினை ராகுல் காந்தி அறிவிப்பார்” என்றார்.

தொடர்ந்து தேமுதிக மாநாட்டில் காங்கிரஸின் மாய வலையில் தவெக தலைவர் விஜய் சிக்கிவிடக்கூடாது என விஜய பிரபாகரன் அறிவுரை கூறியது குறித்து கேட்டதற்கு, “காங்கிரஸ் கட்சிக்கு, மறைந்த நடிகர் விஜயகாந்த் மீது அபரீதமான அன்பும், மரியாதையும் உண்டு. அதே வேளையில், அவரது மகன் விஜய் பிரபாகரனின் பேச்சு என்பது விரக்தியின் வெளிப்பாடு. காங்கிரஸ் 140 ஆண்டுகளை கடந்து உலகளவில் பெயர்பெற்ற பழமையான கட்சி. அவர் பிறப்பதற்கு முன்பே உருவானது. மக்களின் நலன் கருதிதான் கூட்டணி முடிவு செய்யப்படும்” என்றார்.