எத்தனை குழந்தை பிறந்தாலும் பேறு கால விடுப்பு உண்டு - தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு
மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விரும்பும் அரசு பெண் ஊழியர்கள், 12 வாரம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : August 31, 2026 at 6:44 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பணியில் உள்ள பெண்கள், 3வது குழந்தை வரை பெற்றுக்கொண்டால், அவர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும், 3வது குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டால் 12 வாரம் மகப்பேறு விடுப்பை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம் எனவும் மனிதவளத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் மனிதவளத்துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி இன்று அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழ்நாட்டில் அரசுப் பணியில் உள்ள, திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு என்ற விதிமுறை முன்பு நடைமுறையில் இருந்தது.
அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில், இரண்டு குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 9 மாதங்களிலிருந்து (270 நாட்கள்) 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, 12 வாரங்களுக்கு மிகாமல் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்த நிலையில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், 2026-2027-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, 18.8.2026 அன்று சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், 'தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு, அவர்களது மூன்றாவது குழந்தைக்கு தற்போது வழங்கப்படும் மகப்பேறு விடுப்புக்காலம், 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தப்படும்' என அறிவித்தார்.
தற்போது அரசு பெண் ஊழியர்களுக்கு, அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், நிரந்தர அல்லது நிரந்தரமற்ற பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது மூன்றாவது குழந்தைக்கு அனுமதிக்கப்படும் 12 வார மகப்பேறு விடுப்பை, முழு ஊதியத்துடன் கூடிய 365 நாட்களாக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது.
இந்த விடுப்புக் காலத்தை, பிரசவத்திற்கு முந்தைய ஓய்வு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலம் எனப் பிரித்துக்கொள்ளும் வசதி சம்பந்தப்பட்ட பெண் அரசு ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படும். இந்த ஆணை 2026 ஆகஸ்ட் 25 ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். ஆனால் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு முன்னதாகவே 3வது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பில் சென்றிருந்து, அத்தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ தொடர்ந்து விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர்களும், மொத்தம் 12 மாதங்கள் (365 நாட்கள்) வரையிலான மகப்பேறு விடுப்பைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
3வது குழந்தைக்கு மேல் 12 வாரம் விடுப்பு
தமிழ்நாடு அரசின் அடிப்படை விதிகள், 1922-இல் தகுந்த திருத்தங்களை மேற்கொண்டு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி (விதி 101(அ)) 365 நாட்களுக்கு மிகாத காலத்திற்கான மகப்பேறு விடுப்பு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளும் திருமணமான பெண் அரசு ஊழியருக்கு வழங்கப்படும்.
மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு, 12 வாரங்களுக்கு மிகாத காலத்திற்கான முழு ஊதியத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

