சிறுக சிறுக 1,200 கிராம் தங்கம்.. ஊதியம் கொடுத்த ஓனருக்கே விபூதி! 'மாஸ்டர் மைண்ட்' கைது!
சிவக்குமார் கொடுக்கும் ஐடியாக்களை வைத்து தான் ஊழியர்கள் இருவரும் திருடி கொண்டு வரும் நகைகளை விற்று மூவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.

Published : November 13, 2025 at 6:30 PM IST
சென்னை: நகைக்கடையில் இருந்து சிறுக சிறுக 1,200 கிராம் தங்க நகைகளை திருடி விற்று உல்லாசமாக வாழ்ந்து ஊழியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் வசித்து வருபவர் ஜெய்ஷ் ஜெயின் (29). இவர் அதே முகவரியில் தங்க நகை மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஜெயஷ் ஜெயின் கடந்த ஆகஸ்டு மாதம் தங்க நகைகள் இருப்புகளை சரி பார்த்த போது, சுமார் 1,200 கிராம் தங்க நகைகள் குறைவாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சென்னை யானை கவுனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நகை கடைக்கு சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் கடையில் பணிபுரிந்து வந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கடையில் அவ்வப்போது சிறுக சிறுக தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 28ம் தேதி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஈகா மணிகண்டா (23), தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த குணகந்தி கிராந்தி (26) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கடையிலிருந்து சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது. மேலும் அதில் வரும் பணத்தை ஆடம்பரமாக செலவழித்து வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து இருவரிடமிருந்து சுமார் 75 கிராம் எடை கொண்ட மூன்று தங்க செயின்கள், ஒரு பிரேஸ்லெட், ஒரு மோதிரம், ஐபோன், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த சில நபர்களையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஒருவர் தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், யானைகவுனி காவல் நிலைய தனிப்படை போலீசார் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்று சிவக்குமார் (27) என்பவரை கைது செய்தனர்.
| இதையும் படிங்க: காதலனுடன் பேச மறுத்த பெண்; கணவனுக்கு கத்திக்குத்து! |
இதையடுத்து அவரை தெலுங்கான மாநில சூர்யாபேட் முதல் நிலை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 'ட்ரான்சிட் வாரண்ட்' பெற்று நேற்று சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிவக்குமார் கொடுக்கும் ஐடியாக்களை வைத்து தான் அவர்கள் இருவரும் திருடி கொண்டு வரும் நகைகளை விற்று மூவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் சிவக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் கடந்த ஒரு வருடமாக நகைக்கடை ஒன்றில் அதில் பணிபுரிந்த ஊழியர்களே சிறுக சிறுக தங்க நகைகளை திருடி விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

