ETV Bharat / state

இறந்தவரின் உடலை அரசு மருத்துவமனை பிணவறையில் கடித்து குதறிய எலி; திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்

மனஉளைச்சலுக்கு ஆளான உறவினர்கள், உடலை வாங்க மறுத்து மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனை பிணவறை
அரசு மருத்துவமனை பிணவறை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2026 at 9:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணைவறையில் வைக்கப்பட்டவரின் உடலை எலி கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட விஜயபுரம் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (52). இவர் தேனீர் கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று (மே 25) மாலை 5 மணியளவில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் மயக்க நிலையில் கோவிந்தராஜன் கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரது வீட்டில் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவரது உறவினர்கள் ஆட்டோ மூலம் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மருத்துவமனை விதிமுறைகளின்படி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அவரின் குடும்பத்தினரும் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதனையடுத்து, அவரின் உடல் நேற்று இரவு உடற்கூறு ஆய்வு செய்வதற்காக மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டது.

அரசு மருத்துவமனை பிணவறையில் உடலை எலி கடித்த அவலம் (ETV Bharat Tamil Nadu)

இன்று காலை அவரின் உடலை பெற்றுக் கொள்வதற்காக உறவினர்கள் மருத்துவமனையின் பிணவறைக்கு வந்துள்ளனர். அப்போது உடற்கூறு ஆய்விற்கு முன்பு அடையாளம் காட்டுவதற்காகவும், உடலை தூக்க ஆள் இல்லாத காரணத்தினாலும் உறவினர்களை அங்கிருந்த பணியாளர் அழைத்துள்ளார்.

அப்போது உறவினர்கள் பிணவறைக்கு சென்று பார்த்தபோது, இறந்த கோவிந்தராஜன் உடலை எலும்பு தெரியும் அளவு எலி குதறியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கை, கால், முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எலி கடித்து உடலை சேதப்படுத்திருந்தது.

இதையும் படிங்க: திரூவாரூர் புறவழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; ரூ.1427.61 கோடி ஒதுக்கீடு

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான உறவினர்கள், உடலை வாங்க மறுத்து மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான குழு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

மேலும், மருத்துவமனை தரப்பிலிருந்தும் இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்து மன்னிப்பு கோரினர். இதன் பின்னர் சமாதானம் அடைந்த உறவினர்கள் இறந்தவரின் உடலை பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து உயிரிழந்த கோவிந்தராஜனின் மகன் சூர்யா கூறுகையில், “இந்த மருத்துவமனை பிணவறையில் சரியாக குளிரூட்டி இயங்குகிறதா என்பது தெரியவில்லை. எனது தந்தை உடலை எலி ஆங்காங்கே கடித்து குதறி இருக்கிறது. நூற்றுக்கணக்கான உறவினர்கள் அவரின் உடலுக்கு மரியாதை செலுத்திவதற்காக காத்திருக்கின்றனர். இந்த நிலைமையில் எப்படி எடுத்து செல்வது என்று எனக்கு தெரியவில்லை. மருத்துவமனை நிர்வாகம் இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாக மன்னிப்பு கோரியுள்ளனர்” என மன வருத்ததுடன் தெரிவித்தார்.