ETV Bharat / state

ஒருதலை காதலால் விபரீதம்: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து - இளைஞர் கைது

கத்திக்குத்தால் பலத்த காயமடைந்த இளம்பெண் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி பேருந்து நிலையம்
தர்மபுரி பேருந்து நிலையம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 8:02 AM IST

2 Min Read
Choose ETV Bharat

தர்மபுரி: ஒருதலையாக காதலித்து வந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், பேருந்து நிலையத்தில் வைத்து அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி அடுத்த தேங்காய்மரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 31). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அப்பெண் அவரை காதலிக்க மறுத்ததாக தெரிகிறது. இருந்தாலும், சின்னசாமி அவரை விடாமல் பின் தொடர்ந்ததுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அவரை திருமணம் செய்துகொள்ள தொடர்ந்து மறுத்து வந்த இளம்பெண், “வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்” என சின்னசாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சின்னசாமி
கைது செய்யப்பட்ட சின்னசாமி (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் வழக்கம்போல பணிக்குச் சென்ற இளம்பெண், நேற்று (ஜூலை 7) இரவு 7.30 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல நகர பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது அங்கு அவருக்காக காத்திருந்த சின்னசாமி, திருமணம் செய்துக்கொள்ள வலியுறுத்தியுள்ளார். அதற்கு அப்பெண் மறுக்கவே ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் தாக்கியுள்ளார்.

மேலும், வயிறு மற்றும் முதுகு பகுதியிலும் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து துடித்துள்ளார். பேருந்து நிலையத்தில் நின்ற பொதுமக்கள் இச்சம்பவத்தை பார்த்து, சின்னசாமியை தடுத்ததுடன், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழப்பு; 7 பேரை காணவில்லை என கேரளம் முதல்வர் தகவல்

அதோடு, பொதுமக்கள் சின்னசாமியை பிடித்து சரமாரியாக தாக்கி தர்மபுரி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு, செயற்கை சுவாசம் கொடுத்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது‌.

இந்த சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் சின்னசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட் இளம்பெண் தனியார் நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முயன்றதாக சின்னசாமி ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த தர்மபுரி நகர காவல்துறையினர், இளம்பெண் கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில் நடந்த இச்சம்பவம், அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறையவைத்தது.