மது போதையில் தகராறு; நண்பனின் கழுத்தை அறுத்தவர் கைது
இந்த சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குணசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Published : July 7, 2026 at 10:46 PM IST
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட சண்டையில் நண்பனின் கழுத்தை அறுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்பூர் அடுத்த வாணக்காரதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் வேலு மற்றும் குணசீலன். நண்பர்களான இருவரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள மயானத்தில் ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது குணசீலனுக்கு திருமணம் ஆகாதது குறித்து, வேலு அவரை கிண்டல் செய்துள்ளார். மேலும் வேலுவிற்கு, திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில், அது குறித்து வேலுவை குணசீலன் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனிடையே அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை வேலு அப்பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த போது, அங்கு சென்ற குணசீலன் ஆத்திரம் தாங்காமல், தோல் அறுக்கும் கத்தியால் வேலுவின் கழுத்தை அறுத்துள்ளார். வேலுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வேலுவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரை மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குணசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

