மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ மீது காவல் நிலையத்திற்குள்ளேயே தாக்குதல் - திமுக பிரமுகர் கைது
காவல் நிலையத்திலேயே வைத்து உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published : July 3, 2026 at 2:10 PM IST
சிவகங்கை: சட்டவிரோத மணல் கடத்தலை தடுத்த காவல் உதவி ஆய்வாளரை, காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து தாக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள சாத்தம்பத்தி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருவதாக கிராம நிர்வாக அலுவலர் ஜெகனுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் விஏஓ ஜெகன், காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் கல்லல் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலர்கள், சாத்தம்பத்தி பகுதிக்கு விரைந்து சென்றனர். காவலர்களை கண்டதும் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தை காவல் ஆய்வாளர் ரமேஷ் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து அன்று இரவு கல்லல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் துரைசிங்கம் பணியில் இருந்துள்ளார். அப்போது, மது போதையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்த திமுக பிரமுகரான அடைக்கலராஜ் என்பவர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் குறித்து உதவி ஆய்வாளர் துரைசிங்கத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பல நாட்களாக அப்பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருதவதாகவும், இதுவரை எந்த அதிகாரியும் கேள்வி கேட்டதில்லை என பேசிய அவர், உதவி ஆய்வாளர் துரைசிங்கத்திற்கு மிரட்டல் விடுத்தார். அப்போது திடீரென அவரின் கையைப் பிடித்து அடைக்கலராஜ் முறுக்கித் தாக்கியுள்ளார்.
ஏற்கனவே விபத்து ஒன்றில் சிக்கி உதவி ஆய்வாளர் துரைசிங்கத்தின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்தத் தாக்குதலால் அவருக்கு அதே கையில் மீண்டும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
| இதையும் படிங்க: தேனியில் கைதி தப்பியோட்டம்: மூன்று காவலர்கள் ’சஸ்பெண்ட்’ |
இந்த சம்பவம் குறித்து துரைசிங்கம் தனது மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால், அவர்கள் குடிபோதையில் இருந்த அடைக்கலராஜை எச்சரித்து அனுப்பி விடுமாறு கூறியதாகத் தெரிகிறது. இதனால் நள்ளிரவில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் நிலைய சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளின் ஆதாரங்களுடன் உதவி ஆய்வாளர் துரைசிங்கம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.
காவல் நிலையத்திலேயே உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சிசிடிவி ஆதாரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட அடைக்கலராஜை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

