எஸ்.சி பிரிவில் உள் வகைப்பாடு கூடாது; மாலா மகாநாடு தேசிய தலைவர் ரத்னாகர் வலியுறுத்தல்
தற்போதுள்ள இடஒதுக்கீட்டில் 100 எஸ்.சி மக்களில் வெறும் 2 பேருக்கு மட்டுமே பயன் கிடைக்கிறது என மாலா மகாநாடு தேசிய தலைவர் ரத்னாகர் கூறியுள்ளார்.

Published : August 29, 2026 at 5:51 PM IST
சென்னை: எஸ்.சி பிரிவு மக்களை உள் வகைப்பாடு செய்ய முடியாத வகையில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரும் வரை போராடுவோம் என மாலா மகாநாடு தேசிய தலைவர் ரத்னாகர் அறிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர் மன்றத்தில் மாலா மகாநாடு தேசிய தலைவர் ரத்னாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போதுள்ள இடஒதுக்கீட்டில் 100 எஸ்.சி மக்களில் வெறும் 2 பேருக்கு மட்டுமே பயன் கிடைக்கிறது. இந்த சிறிய பங்கை 59 பட்டியல் சாதிகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்குவது சாத்தியமற்றது.
கர்நாடகாவில் 107 சாதிகள் உள் வகைப்பாட்டிற்காக போராடி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள 1,108 பட்டியல் சாதிகளுக்கும் குறைந்த அளவிலான பயனை சமமாகப் பிரித்துத் தருவதாக கூறுவது நடைமுறைக்கு ஒவ்வாதது” என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதேபோல, மற்ற சாதிகளை முன்னேற்ற வேண்டும் என்றால், இடஒதுக்கீட்டை மேலும் 10 சதவீதம் அதிகரித்து அந்தக் கூடுதல் பங்கை வழங்கலாம். ஆனால் தற்போதுள்ள சிறிய பங்கிற்காக எஸ்.சி. சமூகத்திற்குள் பிளவு ஏற்படுத்தக் கூடாது” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ”மக்கள் முறையான மற்றும் தீவிரமான போராட்டம் நடத்தினால் எந்த அரசாங்கமும் பின்வாங்கும். விவசாயிகள் போராட்டத்தால் விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதை நாம் மறந்து விடக்கூடாது.
சமூகநீதி என்ற பெயரில் எஸ்.சி மக்களை உள் வகைப்பாடு செய்ய முடியாத வகையில் அரசியலமைப்பு திருத்தம் வரும் வரை போராட்டம் தொடரும். இந்த உள் வகைப்பாடு முயற்சிக்கு எதிராக அமைதியான, தொடர்ச்சியான மற்றும் ஜனநாயக முறையிலான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

