தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்கிறார் மகேஷ்குமார் அகர்வால்
மகேஷ்குமார் அகர்வால் தேனி, தூத்துக்குடி மாவட்டங்களின் எஸ்.பியாக இருந்தவர். சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையராகவும் பொறுப்பு வகித்தவர்.

Published : June 3, 2026 at 7:35 AM IST
சென்னை: தமிழ்நாட்டின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். விதிகளின்படி, டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே, அடுத்த டிஜிபி பொறுப்புக்கு வரக்கூடிய தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) தமிழக அரசு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. மாறாக, வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக முந்தைய திமுக அரசு நியமித்தது.
இதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்த போது, சந்தீப் ராய் ரத்தோரை சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்தது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதை அடுத்து, புதிய டிஜிபி நியமனம் தொடர்பான யுபிஎஸ்சி ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பரிந்துரை பட்டியல் வழங்கப்பட்டது. இதில், மகேஷ் குமார் அகர்வால் தமிழகத்தின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 3) தமிழகத்தின் 34வது டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொள்கிறார். முன்னதாக, எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) இயக்குநர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னணி
1994-ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். சட்டம் பயின்றவர். தமிழ், இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். தேனி, தூத்துக்குடி மாவட்டங்களின் எஸ்.பியாக இருந்தவர். சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையராகவும் பொறுப்பு வகித்தவர்.
7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பணியாற்றினார். தொடர்ந்து, தமிழகத்தில் சிபிசிஐடி ஐஜி-யாக பதவி வகித்தார். மதுரை காவல் ஆணையராராகவும் பதவியில் இருந்திருக்கிறார். பின்னர் சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக பணியாற்றினார்.
அதன் பின்னர், செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், கடந்த 2020-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக பதவி வகித்தார். அதன் பிறகு, அயல்பணியாக டெல்லி சென்ற அவர், தற்போது தமிழக டிஜிபியாக பொறுப்பேற்க இருக்கிறார்.

