எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
அதிமுக தற்போது எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவும் சென்றுவிடும் என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சாடியுள்ளார்.

Published : October 10, 2026 at 8:26 PM IST
மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (அக்.10) நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 2,000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் கலந்துக் கொண்டனர்.
முகாமில் 70-க்கும் மேற்பட்டோர் தேர்வான நிலையில், அவர்களுக்கு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அரசு உயரதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, தங்கபாண்டியன், முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "மதுரையில் இன்று (அக்.10) நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 70-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவொரு நல்ல தொடக்கமாகும். படித்த இளைஞர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
எஸ்ஐஆரில் தவறு நடந்துள்ளது
எஸ்ஐஆர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. எஸ்ஐஆரை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்திய ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான். எஸ்ஐஆர் முறையாக நடத்தப்படவில்லை; அதில் தவறுகள் நடந்துள்ளன. எஸ்ஐஆர் பணிகளில் 100% தவறு நடந்துள்ளது என்பது உண்மை. எனவே, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
அதே நேரத்தில், எஸ்ஐஆர் நடைமுறையில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டுமோ? அவற்றையும் செய்ய வேண்டும். ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஏற்கனவே நடந்த தவறுகளை சரி செய்வது அவசியம். தமிழ்நாட்டில் எங்களது போராட்டத்திற்கு பிறகு தான் எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
முந்தைய எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர் பட்டியல் திமுகவின் கட்டுப்பாட்டில் இருந்தது. திமுக மாவட்டச் செயலாளர்கள் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு வாக்காளர்களை நீக்கி, அவர்கள் வாக்களிக்க முடியாத சூழலை ஏற்படுத்தியதாக நாங்கள் குற்றம்சாட்டியிருந்தோம். அப்போதும் இதற்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்திருந்தோம்.
எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் 170 தொகுதிகளில் தவெக வென்றிருக்கும்
தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது; இருப்பினும், தேர்தல் நடைமுறைகளில் ஏற்பட்ட தவறுகள் சரி செய்யப்பட வேண்டும்; மறுதேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராடத் தடையில்லை
சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "அனுமதிக்கப்பட்ட இடங்களில் யாரும் போராட்டம் நடத்துவதற்குத் தடை இல்லை. எந்த அரசாக இருந்தாலும், உரிய அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தினால் காவல்துறையினர் தடுக்கத்தான் செய்வார்கள். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் உரிய அனுமதி பெற்றே நடத்தி வருகின்றனர்" என்றார்.
சிஜேபி போராட்டத்துக்கு அனுமதி இல்லை
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு அளிக்குமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "சில குறிப்பிட்ட விஷயங்கள் குறித்துக் கேட்கும்போது எங்களுடைய கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்க முடியும். ஆனால், தனி அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது என்பது வேறு விஷயம்.
எங்களுடைய கருத்தை ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். யாரோ நடத்தும் போராட்டங்களில் நாங்கள் எப்படிக் கலந்துக் கொள்ள முடியும்?, ஒவ்வொரு இயக்கமும் எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த இயக்கங்களுக்குப் பின்னால் வேறு அமைப்புகள் இருந்து செயல்படுகின்றனவா என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.
எஸ்ஐஆர் மற்றும் பாஜக தொடர்பாக நாங்கள் எங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கிறோம். ஆனால், அவர்களுக்கும், எங்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒரு விஷயத்தில் ஆதரவு தெரிவித்துவிட்டு, அதற்காக மற்ற அனைத்துப் போராட்டங்களுக்கும் ஆதரவு அளித்துவிட முடியாது" என்றார்.
பாஜக தவெகவின் கொள்கை எதிரி
தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "தமிழக வெற்றிக் கழகம் தனது கொள்கை நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்துள்ளது. கட்சியின் முதல் மாநாட்டிலேயே பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கின்றோம். இருப்பினும், எங்களுடைய கூட்டணிப் பாதையிலும், கொள்கையிலும் எந்தவிதமான சமரசமும் கிடையாது என்பதை ஒவ்வொரு இடத்திலும் தெளிவுபடுத்தி வருகிறோம்.
இதற்குமேல் எங்களுடைய நிலைப்பாட்டை எப்படித் தெளிவாகச் சொல்ல முடியும்? கொள்கையை வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தேர்தல் களத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பதற்கு சிலருக்கு அருகதை இல்லை. திமுகவும், அதிமுகவும் யாருடைய ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயன்றன என்பது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். டெல்லியில் பேசியதாகவும், டெல்லியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என்றும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கூறியிருந்தனர்.
உதயநிதி ஸ்டாலின் அரசியல் குறித்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அவர் கத்துக்குட்டியைப் போலப் பேசுகிறார்" என்று விமர்சித்துள்ளார்.
அதிமுகவை லெட்டர் பேடு கட்சியாக மாற்றிவிட்டார் இபிஎஸ்
இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "அதிமுக வாக்குகள் மொத்தமாக தவெகவுக்கு மாறியுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளும் நீண்ட காலமாக அதிமுகவின் கோட்டைகளாக இருந்து வந்தவை. அந்தத் தொகுதிகளில் அதிமுக எளிதாக வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்தக் கட்சியை எத்தகைய நிலைக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு சென்றுள்ளார் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
அதிமுக வாக்காளர்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை நம்பியவர்கள். அவர்கள் தற்போது ஒட்டுமொத்தமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகளிலேயே அந்தக் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வாக்குகளைவிட, இடைத்தேர்தலில் இரண்டு மடங்கு கூடுதலாகப் பெற்றுள்ளது.
இரட்டை இலைக்கு வாக்களித்து வந்தவர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை நம்பாமல் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கித் திரும்பியுள்ளனர். தாராபுரத்தில் கூட அதிமுக மூன்றாவது இடத்துக்குச் சென்றிருப்பது அந்தக் கட்சியின் தற்போதைய நிலையை வெளிப்படுத்துகிறது. அதிமுகவை லெட்டர் பேடு கட்சியாகக் கொண்டு சென்று முடித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இனிவரும் தேர்தல்களிலும் அதிமுகவுக்கு இதே நிலைதான் தொடரும்" என்றார்.
திமுகவும் அதிமுகவின் நிலைக்கு செல்லும்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறுகையில், "இடைத்தேர்தலில் திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்ததையே மிகப்பெரிய வெற்றியாக மு.க.ஸ்டாலின் கருதுகிறார். அதிமுக தற்போது எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவும் சென்றுவிடும். மு.க.ஸ்டாலினையோ உதயநிதி ஸ்டாலினையோ பார்த்து மக்கள் வாக்களிக்காத நிலை ஏற்படும்.
ஒவ்வொரு இடைத்தேர்தலையும் அந்தந்தத் தொகுதியின் அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டே மதிப்பிட வேண்டும். இடைத்தேர்தல் முடிவுகளையும், பொதுத்தேர்தல் முடிவுகளையும் ஒன்றாகக் கருத முடியாது. எங்களது கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்தன. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து முதல் முறையாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். இனிவரும் தேர்தல்களிலும் இதேபோன்ற வெற்றியைப் பெறுவோம்" என்றார்.
வேட்பாளர்களை முடிவு செய்வது முதலமைச்சர் தான்
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை யார் முடிவு செய்வார்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "எங்கள் கட்சியில் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வது தவெக தலைவர் விஜய்தான். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை அவரே 100 சதவீதம் முடிவு செய்வார்" என்றார்.

