மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தின் வடத்தை பெண் பக்தர்கள் மட்டுமே பிடித்து இழுத்து செல்வது தனிச்சிறப்பாகும்.

Published : January 11, 2026 at 1:04 PM IST
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளப்பதை குறிக்கும் வகையில் நடைபெறும் அஷ்டமி சப்பர விழா பிரசித்தி பெற்றதாகும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளான இன்று அதிகாலை சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனையடுத்து கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனி சப்பரத்திலும் எழுந்தருளினர். சிவனடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க கீழமாசி வீதியில் புறப்பட்ட சப்பரமானது யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளி வீதி, மேலவெளி வீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலுக்கு வந்தடையும்.
இந்த அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தின் வடத்தை பெண் பக்தர்கள் மட்டுமே பிடித்து இழுத்துசெல்வது தனிச்சிறப்பாகும். நான்கு வெளி வீதிகளிலும் சப்பரத்தில் வலம் வந்த சுவாமி மீனாட்சி அம்மனை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். சப்பரத்தின் முன்பாக சிவாச்சாரியார்கள் அரிசியை தூவியபடி சென்ற நிலையில், அதனை கூடியிருந்த பக்தர்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், நோய் நொடி நீங்கி பசிப்பணி நீங்கும் என்பது நம்பிக்கை. மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்குத் துன்பம் நீங்கி முக்தி கிடைப்பது உறுதி என்று இறைவன் சிவன்பெருமான் கூறியதாக நம்பப்படும் நிலையில், இந்த அஷ்டமி சப்பர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரையில் காலை முதல் சாரல் மழை பெய்துவரும் நிலையலும் மழையில் நனைந்தபடி பெண் பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். முன்னதாக பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

