அஜித்குமார் கொலை வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
திருப்புவனம் காவல் துறையினர், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்

Published : February 23, 2026 at 5:47 PM IST
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் முன் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை நிகிதா என்பவர் தனது நகைகளை திருடி விட்டதாக போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி தனிப்படை காவலர்களின் விசாரணையின் போது, அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அஜித்குமாரின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து காவலாளி அஜித்குமார் தனிப்படை காவல் துறையினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நிகிதா என்பவர் தனது நகைகள் காணாமல் போனதாக அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் காவல் துறையினர், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் எனது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருவதால், என்னை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தடுக்க முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி, மனுதாரர் சண்முக சுந்தரத்தின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

